
மகாராஷ்டிரா மற்றும் இமாசலப் பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் இன்று (ஆக்.14) அதிகாலை 3.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5:32 மணியளவில் ஏற்பட்ட இந்த. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானது. பூமிக்கு அடியில் சுமார் 3 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலையில் திடீரென நில அதிர்வு உணரப்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். முன்னதாக 3 நாட்களுக்கு முன்பாக மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் 1 மணி நேர இடைவெளியில் இரண்டு முறை 3.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா பகுதியில் இன்று காலை 6.36 மணியளவில் பூமிக்கு 5 கிலோமீட்டர் ஆழத்தில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. இந்தியாவைத் தவிர ஆப்கானிஸ்தானிலும் இன்று அதிகாலை 4:29 மணியளவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.



