கர்நாடகாவில் பதற்றம்… வனத்துறை துப்பாக்கிச் சூட்டில் 3 தமிழர்கள் பலி

வேட்டைக்கும்பல் என கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், சாமராஜநகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்தின் ஷாக்யா வனப்பகுதியில், இன்று (ஆகஸ்ட் 15) மான் வேட்டையாடும் குழுவினர் நுழைந்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பகுதிக்குள் மான் வேட்டையாடும் கும்பலை சுற்றி வளைக்க முயன்றனர். ஆனால், மான் வேட்டையாடும் குழுவினர் தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் மான் வேட்டையாடும் கும்பல் என்று கூறப்படுபவர்களுக்கும்,, வனத்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கர்நாடக வனத்துறை தெரிவித்துள்ளது. இந்த சண்டையில் வேட்டையாடும் குழுவில் ஒருவரும், வனத்துறை ஊழியர் ஒருவரும் காயமடைந்தனர். வனத்துறையின் தகவலின்படி, வனத்துறையினர் தங்களை நெருங்கியபோது, ​​வேட்டையாட வந்ததாக சந்தேகிக்கப்பட்டவர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் போது மற்றொரு நபர் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து ஹனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனூர் தாலுகாவில் உள்ள மரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி (50), ஜகன்னாததொட்டியைச் சேர்ந்த ஜான்ரோஸ் பீட்டர் ( 42), லாசர் ஆகியோர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். இவர் மூவரும் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட கர்நாடகாவில் வாழும் தமிழர்கள்” என்பது தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து நாட்டுத் துப்பாக்கி ஒன்றையும், ஒரு மானின் உடலையும் வனத்துறையினர் கைப்பற்றியதாகத் தெரிகிறது. இந்த மோதலின்போது காயமடைந்த வனத்துறை ஊழியர் சிகிச்சைக்காக கொல்லேகால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இருப்பினும், இந்தச் சம்பவம் ஷாக்யா கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையின் விளக்கத்தை உள்ளூர் மக்கள் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்; மேலும், அந்த மூவரும் பிடிபட்ட பிறகு மிக அருகில் வைத்துச் சுடப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக கிராம மக்கள் கூறுகையில், “துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மூன்று பேரும் வேட்டைக்காரர்கள் இல்லை; அவர்கள் வனத்துறை ஊழியர்களைத் தாக்கவும் இல்லை. பழிவாங்கும் நடவடிக்கையாகவே அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.

தமிழர்கள் மூன்று பேர் கர்நாடகா வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து காவிரி வனவிலங்கு சரணாலய அலுவலகத்தை ஒரு கும்பல் அடித்துச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் கர்நாடகாவின் சாமராஜநகர் மாவட்டத்தில் உள்ள ஹனூரில் பதற்றம் நிலவி வருகிறது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *