
பிஹாரில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
பிஹார் மாநிலம் லக்கிசராய் மாவட்டத்தில் அசோக் தாம் என்ற புகழ்பெற்ற கோயில் உள்ளது. புனித ஸ்ரவன் மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று (ஆக.17) பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதலே அலைமோதியது. இந்நிலையில் காலை 6.40 மணியளவில் கோயிலுக்கு செல்ல மண்பாதையில் பெண் பக்தர்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த இடத்திற்கு அருகே அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் மின் கம்பம் திடீரென முறிந்து விழுந்தது. இந்த கம்பத்திலிருந்து மின்சாரம் தாக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதனால் பீதியடைந்த பக்தர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். மழை பெய்து ஈராமாக இருந்ததால், ஓடிய பெண்கள் சிலர் வழுக்கி விழுந்தனர். அவர்களை மற்ற பக்தர்கள் மிதித்துச் சென்றதில் ஏழு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த லக்கிசராய் மாவட்ட ஆட்சியர் சைலேந்திர குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பிரேர்னா குமார் உள்ளிட்ட அதிகாரிகள், விரைந்து வந்தனர். அத்துடன் மீட்பு பணிகளைத் துரிதப்படுத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயரச் சம்பவத்திற்கு பிஹார் முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை உடனடியாக அளிக்க மருத்துவ நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திப்பதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் சாம்ராட் சௌத்ரி பதிவிட்டுள்ளார்
உயிரிழந்த 7 பேரில் ஹேமலதா, தேவி, ரிங்கு தேவி மன்மாலா தேவி மற்றும் மதுபாலா தேவி ஆகிய 4 பேர் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்கள் யார் என்ற அடையாளம் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் பிஹாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



