
பாஜக எம்எல்ஏ தனது சொந்த காரை தீயணைப்பு துறை வாகனம் மூலம் கழுவ பயன்படுத்திய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், சிங்க்ரவுலி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பாஜகவைச் சேர்ந்த ராமநிவாஷ் ஷா என்பவர் உள்ளார். இவரது ‘இன்னோவா’ காரை சிங்க்ராலி மாவட்டத்தில் உள்ள அரசு இல்லத்திற்கு வெளியே, தீயணைப்பு வாகனத்தில் உள்ள நீரைப் பயன்படுத்தி நகராட்சி ஊழியர்கள் கழுவியுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், அரசு இல்லத்திற்கு வெளியே, தீயணைப்பு வாகனத்தில் உள்ள நீரைப் பயன்படுத்தி நகராட்சி ஊழியர்கள் மூன்று பேர் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராமநிவாஷ் ஷாவின் இன்னோவா காரைக் கழுவுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தீயணைப்பு வாகனத்துடன் இணைக்கப்பட்ட குழாய் (hosepipe) மூலம் மூன்று ஊழியர்களும் காரின் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
அவசரக்கால சேவைக்கான வாகனம் ஒரு அரசியல்வாதியின் தனிப்பட்ட காருக்காகப் பயன்படுத்தப்பட்டதா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதால், இந்த வீடியோ அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. தனிப்பட்ட தேவைக்காக அரசு வளங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து சமூக ஊடகங்களில் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்துப் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராமநிவாஸ் ஷா, “நான் ஒன்றும் காரைக் கழுவவில்லையே? நான் வீட்டை விட்டு வெளியில் நிகழ்ச்சிகளுக்குச் சென்றிருந்தேன். இதன் பின்னணி குறித்து என் டிரைவரிடம் தான் கேட்க வேண்டும்” என்று பதிலளித்துள்ளார்
“மக்களுக்கு அவசர நிலை ஏற்படுகையில் தீயணைப்பு வாகனங்கள் வராது, ஆனால் பாஜக எம்எல்ஏவின் காரைக் கழுவ வாசல் வரை தேடி வருகிறது” என மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உமாங் சிங்கார் என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலையில், தனக்கு இந்த சம்பவம் பற்றித் தெரியாது என்று சிங்க்ராலி நகராட்சி ஆணையர் சவிதா பிரதான் கூறியுள்ளது சர்ச்சையை பெரிது படுத்தியுள்ளது.



