
நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கிய 288 இந்தியர்களைக் காணவில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி ஆற்றில் நேற்று (ஆகஸ்ட் 26) காலை 9 மணியளவில் திபெத் பகுதியில் இருந்து திடீரென வெள்ளம் கீழ்நோக்கி பல அடி உயரத்துக்கு கரைபுரண்டு வந்தது. இந்தச் சம்பவத்தில், கோஷி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலங்கள், ஆற்றங்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பனிப் பாறை உடைந்து சரிவு ஏற்பட்டதே இந்த வெள்ளத்திற்கு காரணம் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் இதுவரை 289 பேர் பலியானதாகவும் 1,500 பேரைக் காணவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேபாளத்தில் 177 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 517 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட 823 பேர் இன்னும் காணவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
திபெத்தின் கியிராங் மாவட்டத்தில் 3 பேர் பலியானதாகவும், 260 வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் உள்பட 558 பேர் காணாமல் போனதாகவும் சீன அரசு அறிவித்துள்ளது. கைலாஷ் மானசரோவருக்கு ஆனமிகச் சுற்றுலா சென்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேபாளத்தில் 288 இந்தியர்கள் காணாமல் போனதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “ திரிசூலி மின்னுற்பத்தி நிலையத்தில் பணியாற்றி வந்த 73 இந்தியர்களும் மாயமாகியுள்ளனர். ஜிலாங் நகரில் 4 பேரும், சாகா செல்லும் வழியில் உள்ள ஜுதுல்புக்கில் 30 பேரும், அருகில் சில இடங்களில் 60 முதல் 70 பேரும் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திபெத்தில் உள்ள சீன எல்லைப் பகுதியில் இந்தியர்கள் பலர் சிக்கித் தவித்து வருகின்றனர். 200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உதவி கோரியுள்ள நிலையில், அவர்களில் 95 பேர் தற்போது டார்செனில் உள்ளனர். இந்தத் துயரமான நேரத்தில் நேபாளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும். மேலும், காத்மாண்டுவில் உள்ள இந்தியாவுக்கான நேபாள தூதருடன் தொடர்பு கொண்டுள்ளோம்” என்றார்.



