
மும்பையில் கொக்கைன் மற்றும் மெத்தாகுவாலோன் கடத்திய வெளிநாட்டைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்கு போதைப்பொருள் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவிற்கு இடையே செயல்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விவரம் கிடைத்தவுடன் மும்பை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சோதனையை தீவிரப்படுத்தினர். அவர்கள் மும்பையின் மீரா சாலையில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இந்தூரில் இருந்து பேருந்தில் வந்த ஒரு கென்யாவைச் சேர்ந்த பெண்ணையும், அவரிடமிருந்து பார்சலைப் பெற வந்த நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவரையும் பிடித்தனர். அவர்கன் உடமைகளைச் சோதனையிட்ட போது எல்வி எனக்குறிக்கப்பட்ட இரண்டு பொட்டலங்கள் அவர்களிடமிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை கருவிகளை வைத்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடமிருந்தது 547 கிராம் எடையுள்ள அந்த வெள்ளை நிறப் படிகப் பொருள் கொக்கைன் மற்றும் மெத்தாகுவாலோன் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போதை மருந்துகள் மற்றும் என்டிபிஎஸ் சட்டம், 1985-ன் கீழ் வெளிநாடுகளைச் சேர்ந்த அந்த இரண்டு வெ பேரையும் கைது செய்து போதைப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர். சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களின் முயற்சியை மும்பை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.



