உருவமறியா இசைவெளி II- தேசிய உணர்வை பற்ற வைத்த ‘பாமா விஜயம்’

‘ஜன கண மன என ஜதி சொல்லும் நேரம்
ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்’

இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப சென்ற இடத்தில் பல்கில் கட்டப்பட்டிருந்த ஸ்பீக்கரில் இருந்து எஃப்.எம் வழியாக இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. 1992-ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய ‘வானமே எல்லை’ படத்தில் இடம் பெற்ற பாடல் இது. அந்த நேரத்தில் மரகதமணி இசையில் இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. கவிஞர் வைரமுத்து எழுதிய ‘ஜன கண மன’ என்ற வரிகள் இப்படத்தின் கதையோடு இணைந்து எழுதப்பட்டதாகும்.

நாட்டின் நடைபெறும் எந்த ஒரு நிகழ்ச்சியின் முடிவிலும் தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபாகும். அதன்படி வாழ்க்கையை முடித்துக் கொள்ள தற்கொலை முடிவை அமல்படுத்த செல்லும் நண்பர்கள் பாடுவது அமைக்கப்பட்ட இந்த பாடலின் துவக்க வரியை ‘ஜன கண மன என ஜதி சொல்லும் நேரம் ஜனனமும் மரணமும் சந்திக்கும் காலம்’ என வைரமுத்து எழுதியிருப்பார்.

தேசிய கீதம்
ஒரு பாடலின் வழியே காட்சிக்கு உயிரூடப்பட்ட இந்த ‘ஜன கண மன’ என்ற சொல், நிலைபெற நிறைய போராட வேண்டியிருந்தது. மிக இயல்பாக பாடப்படும் தேசிய கீதம் கடந்து வந்த பாதை நெருக்கடி மிகுந்தது. 1911-ம் ஆண்டு டிசப்ர் 27-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற 26வது அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் முதல் முதலாக கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘ஜன கண மன’ பாடல் பாடப்பட்டது.

கிட்டத்தட்ட இந்த பாடலின் வயது தற்போது 115. இந்த பாடல் பிறந்ததில் இருந்து சர்ச்சை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. நோபல் பரிசு பெற்ற கவிஞர் தாகூர், அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்தவர். ஆங்கில அரசு வழங்கிய ‘சர்’ பட்டத்தை உதறியவர். அப்படிப்பட்டவர் எழுதிய தேசிய கீதத்தை ஜார்ஜ் மன்னரின் இந்திய வருகையை வாழ்த்துவதற்காகப் பாடப்பட்டது என்று புரளி கிளப்பி விட்டனர்.

பிரிட்டிஷ் அரசு எதிர்ப்பு
1911-ம் ஆண்டு பிரிட்டிஷ் மன்னர் ஐந்தார் ஜார்ஜ் இந்திய வந்தார். அப்போது அவரை வரவேற்பதற்காகவே ரவீந்திரநாத் தாகூர் இந்த வரிகளை எழுதியதாக வதந்தி பரப்பப்பட்டது. ஆனால், இந்த வதந்தியை தாகூர் கடுமையாக எதிர்த்தார். இப்பாடலில் வரும் ‘பாரத பாக்ய விதாதா’ (பாரதத்தின் விதியை நிர்ணயிப்பவர்) என்ற சொல் எந்தவொரு பிரிட்டிஷ் அரசரையும் குறிக்காது, அது இந்தியாவை வழிநடத்தும் நல்வழிகாட்டியையே குறிக்கும் என்றும் தாகூர் விளக்கமளித்தார். ஆனால், மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு அன்றைய அரசுக்கு ஆதரவான ஊடகங்கள் எழுதின. அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் முதல் முதலாக தேசிய கீதம் பாடப்பட்டதை தொடர்ந்து தாகூரின் சாந்தி நிகேதனை “அரசாங்க அதிகாரிகளின் கல்விக்கு முற்றிலும் பொருத்தமற்ற இடம்” என்று பிரிட்டிஷ் அரசு ஒரு சுற்றறிக்கை மூலம் அறிவித்தது. அத்துடன் தங்கள் குழந்தைகளை அங்கு படிக்க அனுப்பும் அதிகாரிகளுக்கு எதிராக தண்டனை வழங்கப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் எச்சரித்திருந்தது. ஜார்ஜ் மன்னரின் வருகையை ஆதரித்து தாகூர் எழுதியிருந்தால் இந்த நடவடிக்கையை அந்நிய அரசு எடுத்திருக்குமா?

திரையரங்கில் தேசிய கீதம்
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, எந்தப் பாடலைத் தேசிய கீதமாக அறிவிப்பது என்ற விவாதம் எழுந்தபோது, ரவீந்திரநாத் தாகூரின் ‘ஜன கண மன’, பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் ‘வந்தே மாதரம்’ ஆகிய பாடல்களுடன் முகமது இக்பாலின் ‘சாரே ஜஹான் சே அச்சா’ பாடலும் பரிசீலனையில் இருந்தது. மும்பையில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் தேசிய கீதமாக ‘ஜன கண மன’ தேர்வு செய்யப்பட்டது.1950-ம் ஆண்டு ‘ஜன கண மன’ தேசிய கீதமாகவும், ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலாகவும் அங்கீகரிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், தான் “இந்தியா முழுவதுமுள்ள திரையரங்குகளில் கட்டாயம் தேசிய கீதம் இசைக்கவேண்டும் என்றும், அப்போது பார்வையாளர்கள் அனைவரும் எழுந்துநிற்கவேண்டும்” என்று 2015-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து அஸ்வினி உபாத்யாயா என்பவர் வழக்குத் தொடர்ந்தார். “தேசிய கீதம் இசைக்கப்படும்போது அதற்கு உரிய மரியாதை கொடுக்கவேண்டும். அதனால், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கவேண்டிய கட்டாயமில்லை” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முதல் தமிழ் சினிமா
சுதந்திரத்திற்கான தேசிய போராட்டம் நடைபெற்ற போது தமிழ்நாட்டில் திரைப்படங்கள் அதற்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்தன. தேசிய உணர்வூட்டும் காட்சிகள், வசனங்கள், பாடல்களை படங்களில் பதிவு செய்தன. இதனால் திரைப்படங்கள் தடை செய்யப்பட்டன. 22 வாரங்கள் ஓடிய ‘தியாகபூமி’ திரைப்படம் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டது இந்த நிலையில் தான், சுதந்திரத்திற்கு முன்பே தேசிய கீதம் பாடலை தமிழ் படம் ஒன்றில் பதிவு செய்தனர். அந்த படத்தின் பெயர் ‘பாமா விஜயம்’.

வசூல் வாரிக்குவித்த படம்
1934-ம் ஆண்டு மணிக் லால் டாண்டன் இயக்கிய ‘ பாமா விஜயம்’ ஒரு புராணப்படமாகும். கர்நாடக இசை மேதை ஜி.என்.பாலசுப்பிரமணியம் நடித்த முதலாவது திரைப்படம். நாரதர் வேடம் ஏற்று அவர் நடித்தார். மகாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணர் வேடத்திலும், ‘பாளையம்கோட்டை சகோதரிகள்’ என்று அழைக்கப்பட்ட பி.எஸ்.ரத்னா பாய், பி.எஸ்.சரஸ்வதி பாய் ஆகியோர் ருக்மணி, சத்தியபாமா வேடங்களிலும் நடித்தனர்.

ஹாலிவுட்டில் பயிற்சி பெற்ற மணிக் லால் டாண்டன் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது. 59 பாடல்கள் இடம் பெற்ற இப்படத்திற்கு கே. தியாகராஜ தேசிகர் இசையமைத்தார். ஜி.என்.பாலசுப்பிரமணியம் 10 பாடல்களைப் பாடினார். கோவை செல்லம் டாக்கீஸாரால் 1 லட்ச ரூபாய் செலவழித்து எடுக்கப்பட்ட நூறு சதவீதம் பேசும் பாடும் தமிழ்ப்படம் என விளம்பரம் செய்யப்பட்டது. இந்த படம் மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்தது,

ஜி.என்.பாலசுப்பிரமணியம்

ஏ.என்.மருதாச்சலம் செட்டியாரால் தயாரிக்கப்பட்ட இந்த படத்தில் படத்தின் இறுதிக்காட்சியில் அனைத்து கதாபாத்திரங்களும் இணைந்து தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலைப் பாடுவது போன்ற காட்சி இடம் பெற்றது. இது பார்வையாளர்கள் மத்தியில் தேசிய உணர்வை ஏற்படுத்தியது. இந்தியாவின் வருங்கால தேசிய கீதத்தை திரையில் பாடியது இதுவே முதல் முறை என்ற பெருமையைப் பெற்ற படம் ‘பாமா விஜயம்’ வெளியாகி 92 ஆண்டுகளாகி விட்டது.
–ப.கவிதா குமார் ( தொடரும்)

  1. https://maduraiseithi.in/uruvama.riya-isaiveli-part-ii/
    2,https://maduraiseithi.in/uruvamariya-isaiveli-part-ii-2/
இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *