
டெல்லியில் விமானம் தரையிறங்கிய சில நிமிடங்களிலேயே சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே உள்ளிட்ட மூவரை போலீஸார் காவலில் எடுத்துள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரத்தில் (எஸ்ஐஆர்) தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் அமைப்பினர் சார்பாக நாடு முழுவதும் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று(அக்.10) போராட்டம் நடைபெறும் என்று சிஜேபி, அகில இந்திய மாணவர் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதன் காரணமாக தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அத்துடன் டெல்லியில் 57 மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. போராட்டத்தை ஒடுக்க 27ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட பகுதிகளுக்குள் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் காரணமான வினாத்தாள் கசிவு தொடர்பாக சிஜேபி டெல்லியில் நடத்திய போராட்டத்தை நினைவில் கொண்டுள்ள போலீஸார், கடுமையான கட்டுப்பாட்டுக்களை விதித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்க இந்தியா முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரை நோக்கி கிளம்பியுள்ளனர். இந்த நிலையில், போராட்டக் களத்திற்கு வந்து போராட முயன்ற 150 க்கும் மேற்பட்ட சிஜேபி ஆதரவாளர்களை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் மும்பையில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்த சிஜேபி தலைவர்கள் அபிஜித் தீப்கே, அசுரோஷ் ரங்கா மற்றும் சௌரவ் தாஸ் ஆகியோரை காவல்துறை காவலில் எடுத்துள்ளதாகக் கூறியுள்ளது. டெல்லியில் விமானத்தில் இருந்தே அவர் காவலில் எடுக்கப்பட்டதாக சிஜேபி அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
டெல்லி காவல்துறையின் இந்த நடவடிக்கையை ‘சர்வாதிகார செயல்’ என்று விமர்சித்த சிஜேபி, மூவரையும் உடனடியாக, நிபந்தனை ஏதுமின்றி விடுவிக்க வேண்டும் என்றதுடன், ‘இந்த நடவடிக்கை மக்களின் சுதந்திரமான நகர்வு உரிமையை வெளிப்படையாக மீறுவதாக’ குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக, பிரபல யூட்யூபர் துருவ் ரத்தீ, சிஜேபியின் சட்ட விவகாரப் பிரிவு தலைவர் ரத்னா சிங் ஆகியோரும் காவல்துறையினரால் காவலில் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. முன்னதாக மும்பையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டபோது, காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே, “நான் கைது செய்யப்பட்டாலும் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களுக்கான போராட்டம் தொடரும்” என்று தெரிவித்தார்.



