பிரேசிலில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சி: 4-வது முறையாக அதிபராகும் லூலா

பிரேசிலில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனால் 4வது முறையாக லூலா டா சில்வா அதிபராகிறார்.

லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார நாடான பிரேசிலில் அக்.4-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் தொழிலாளர் கட்சி தலைவரும், தற்போதைய அதிபருமான லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவின் மகனான பிளாவியோ போல்சனாரோ இடையே கடும் போட்டி நிலவியது.

முதற்கட்ட வாக்குபதிவு முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் நேற்று (அக்டோபர் 25) அங்கு இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் 78 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர், லூலா 51.21 சதவீத வாக்குகளுடன் முன்னிலையில் இருந்தார். அதே நேரத்தில் போல்சனாரோ 48.79 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் அதிபர் லூயிஸ் லூலா டா சில்வா தனது போட்டியாளரான பிளாவியோ போல்சனாரோவை தோற்கடித்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இந்த வெற்றியை பிரேசிலில் இடதுசாரிகள் கொண்டாடி வருகின்றனர்.

பிரேசில் அதிபர் தேர்தலில் லூலா வெற்றி பெறுவது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்பு, 2003 ஜனவரி முதல் 2010 டிசம்பர் வரை இரண்டு முறை அதிபராகப் பதவி வகித்த அவர், மீண்டும் 2023 ஜனவரியில் அதிபரானார். இடதுசாரியான அதிபர் லூயிஸ் லூலா டா சில்வா அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கொள்கைகளை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆனால், பிளாவியோ போல்சனாரோ, அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்துடன் சிறந்த ஒப்பந்தங்களை மேற்கொள்வதாக தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி அளித்திருந்தார். ஏனெனில், லத்தீன் அமெரிக்காவை, அமெரிக்காவின் செல்வாக்குக்கு உட்பட பிராந்தியமாக வெள்ளை மாளிகை கருதுகிறது. மேலும் பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்காவின் கொள்கைகளை ஆதரிக்கும் தலைவர்கள் பிரேசில் ஆட்சியில் இருப்பதை டிரம்ப் நிர்வாகம் விரும்புகிறது.

இந்த நிலையில் லூலுவின் வெற்றி மேற்குலகில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரம் இடதுசாரி தலைமையின் கீழ் நீடிப்பது உறுதியாகியுள்ளது. அதே போல இந்த முடிவு அமெரிக்க அதிபர் டிரம்பின் கூட்டாளிகளுக்கு பெரும் பின்னடைவாகும். பிரேசிலின் மீது ஆதிக்கம் செலுத்தும் கனவில் இருந்த டிரம்ப்புக்கு இந்த தேர்தல் முடிவு பேரிடியாக இறங்கியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *