
திமுக எம்.பி கனிமொழி
உலகின் பிற நாகரிகங்களுடனான உறவு குறித்து புதிய ஆய்வுகள் மேற்கொள்வது காலத்தின் கட்டாயம் என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.
எகிப்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் பெயர்கள் தமிழ்-பிராமி கல்வெட்டுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் லொசேன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் இங்கோ ஸ்ட்ராச் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் சார்லோட் ஸ்மித் ஆகியோர் கடந்த 2024-2025 ஆண்டுகளில் நடத்திய ஆய்வறிக்கையை பன்னாட்டு கருத்தரங்கில் சமர்ப்பித்துள்ளனர்.இதில் 20 கல்வெட்டுகளில் தமிழ்- பிராமி எழுத்துகள் உள்ளன. சிகை கொற்றன் என்ற தமிழ் வணிகரின் பெயர் ஐந்து வெவ்வேறு பிரமிடுகளில் 8 இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு கல்வெட்டில் சிகை கொற்றன் வர கண்ட (இங்கு வந்து பார்த்தான்) என பொறிக்கப்பட்டுள்ளது
இதுதொடர்பாக திமுக துணைப்பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினருமான கனிமொழி தனது எக்ஸ் பதிவில், “எகிப்து நாட்டின் மன்னர்களின் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள பிரமிடுகளில் உள்ள பழமையான கல்வெட்டுகளில் தமிழ்-பிராமி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பழந்தமிழர்களின் கடல் கடந்த பயணங்கள், பன்னாட்டு வணிகத் தொடர்பு மற்றும் உலகின் பிற நாகரிகங்களுடனான உறவு குறித்து மேலும் பல புதிய ஆய்வுகள் மேற்கொள்வது காலத்தின் கட்டாயமாகத் தோன்றுகிறது.
அப்படியான ஆய்வுகள், பண்டைய தமிழ் நாகரிகத்தின் சிறப்புகளைப் பறைசாற்றுவதுடன், இந்த நவீன யுகத்திலும் சரியான வெளியுறவுக் கொள்கைகளை வகுத்து, இந்த நாட்டின் பாதுகாப்பை, பொருளாதார நலனை, தனித்துவத்தை உறுதி செய்ய முடியாமல் திணறும் ஒன்றிய பாஜக அரசுக்கு பாடம் கற்றுக்கொள்ள உதவிகரமாக அமையும்.” என்று தெரிவித்துள்ளார்.



