திருப்பூரில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் 6 பேர் கைது!

திருப்பூரில் கைது செய்யப்பட்டவர்கள்

பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட தீவிரவாதிகள் 6 பேர் திருப்பூரில் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்தியா முழுவதும் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டை, மதத்தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறைக்கு இன்று (பிப்ரவரி 21) தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விசாரித்த போது, சமூக வலைதளங்களில், பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சிலர் கருத்துகளைப் பதிவிட்டிருந்ததை டெல்லி கியூ பிரிவு போலீஸார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். அப்போது திருப்பூரில் அவர்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அவர்களை கையும், களவுமாக பிடிக்க டெல்லி கியூ பிரிவு போலீஸார் திருப்பூர் விரைந்தனர். திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்ட போலீஸார் உதவியுடன் முகாமிட்டு தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் திருப்பூர் ஊத்துக்குளி, பல்லடம், திருமுருகன்பூண்டி பகுதிகளில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர்.. இதையடுத்து ஊத்துக்குளி பகுதியில் 2 பேர், பல்லடத்தில் 3 பேர், திருமுருகன்பூண்டியில் ஒருவர் என பதுங்கியிருந்த 6 பேரை இன்று (பிப்ரவரி 21) கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் 6 பேரும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் வேலை பார்ப்பதும் தெரிய வந்தது. அத்துடன் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 8 செல்போன்கள் மற்றும் 16 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *