
சிவகங்கையில் 1 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள மாமன்னர் மருதுபாண்டியர்கள் சிலையை மதுரையில் காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மதுரையில் ரூ.1,805.78 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அரசு விழாக்கள் மற்றும் திமுக தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விமானம் மூலம் மதுரை வந்தார். அவருக்கு அங்கு திமுகவினர் திரண்டு வரவேற்பளித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து காரில் புறப்பட்ட முதலமைச்சர், வடபழஞ்சியில் உள்ள எல்காட் தொழில்நுட்ப பூங்காவிற்கு வந்தார்.
அங்கு எல்காட் வளாகத்தில் பினாகிள் இன்போடெக் நிறுவனத்தின் விரிவுப்படுத்தப்பட்ட புதிய உலகளாவிய சிறப்புப் பொறியியல் மையக்கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் புதிய கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து எச்.சி.எல். நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அங்கு ரூ.3.50 கோடி செலவில் அமைக்கப்பட்டிருந்த அங்கூரான் நவீன அறிவியல் மையத்தையும் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர் மதுரை தமுக்கத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையில் ரூ.213.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் மேம்பாலத்தை திறந்து வைத்தார். இதே நிகழ்ச்சியில் சிவகங்கையில் 1 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ள மாமன்னர் மருதுபாண்டியர்கள் சிலையை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மதுரை அரசு மீனாட்சி கல்லூரிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள எச்.பி. கணினி திறன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். பின்னர் ரூ.50 கோடி செலவில் மறு சீரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்ட வண்டியூர் பூங்காவை முதலமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். இங்கு நடந்த விழாவில் ரூ.1.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகக் கட்டிடம் மற்றும் ரூ.1536.31 கோடி செலவிலான 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தையும் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த விழாக்களில் அமைச்சர்கள் பெ..மூர்த்தி, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



