மதுரை டிரெய்லர் தான், திருச்சியில் இருக்கிறது மெயின் பிக்சர்- மு.க.ஸ்டாலின் பேச்சு!

மதுரையில் நடைபெற்ற திமுக தெற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை மாநாடு வெறும் டிரெய்லர்தான், திருச்சியில் தான் மெயின் பிக்சர் இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

மதுரை உத்தங்குடியில் இன்று (பிப். 21) நடைபெறும் தெற்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, டி.ஆர்.பாலு எம்.பி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஐ. பெரியசாமி, பி. மூர்த்தி கே. என். நேரு, தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “வீரம், பாசம், கோயில், சாப்பாடு என்றாலும் மதுரைதான், இங்கு எல்லாமே பிரபலம்தான். அப்படி பெருமைமிகு மதுரையில் ‘என் வாக்குச் சாவடி, வெற்றி சாவடி’ பயிற்சி மாநாட்டில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. சித்திரைத் திருவிழா போல கூடியிருக்கும் உங்களைப் பார்த்து உற்சாகம் அடைகிறேன். உத்தங்குடி முழுக்கவே உடன்பிறப்புகள் குடியேறிவிட்டதுபோல உணர்வு. இனி நாமதான். இனி எப்போதுமே நாமதான்.

நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது வெற்றி பெற்றோம். ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தைத் தொடங்கி இந்தியாவிலேயே அதிகளவில் கிட்டத்தட்ட ஒரு கோடி உறுப்பினர்களை அதில் இணைத்தோம். வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிரத் திருத்தம் மூலம் பலரின் பெயர்கள் நீக்கப்பட்டபோதும் யாருடைய பெயரும் நீங்கிடாத வகையில் பம்பரமாக சுழன்ற இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம். மதுரை மாநாடு வெறும் டிரெய்லர்தான், திருச்சியில் தான் மெயின் பிக்சர் இருக்கிறது. திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் பத்து லட்சம் பேரை திரட்ட திட்டமிட்டிருக்கிறோம். அடுத்த இரண்டு மாதங்களுக்கு திமுகவினருக்கு ஓய்வே கிடையாது. எல்லாவற்றையும் திட்டமிட்டு வைத்திருக்கிறோம்.

சமூக வலைதளமாக இருந்தாலும், வீடுகளாக இருந்தாலும் திமுகவினர் தீவிரமாக வாக்குச் சேகரிப்பில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு பூத்துக்கும் 350 வாக்குகள் என்ற இலக்கை வைத்துக் கொண்டாலே எளிதாக வெற்றி பெற்று விடலாம். மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த மகளிர் உரிமைத் தொகையை மத்திய அரசு நிறுத்தப் பார்த்தது. ஆனால், காலையிலேயே ரூ. 5,000 என்ற ஆச்சரியம் கொடுத்ததுமே மத்திய அரசுக்குப் பயந்து மக்கள் உடனே வங்கிக்குச் சென்று தங்கள் பணத்தை எடுத்துக் கொண்டனர்.

மக்களுக்காக கொடுத்தால் அது திமுக. ஆனால், மக்களிடம் இருந்து எடுத்துக் கொண்டால் அது மத்திய அரசு. நமது மாநிலம் வரலாறு காணாத வளர்ச்சி அடைத்திருக்கிறது. அது எதிரிகளின் கண்ணை உறுத்துகிறது. வாக்காளர்களை கனிவாக பணிவாக நடத்த வேண்டும். மக்கள்தான் எஜமானர்கள்; நாம் சேவகர்கள்.
எடப்பாடி பழனிசாமி போல நாங்கள் கோழைகள் அல்ல; ஆட்சியல்ல, பதவியல்ல.. உயிரே போனாலும் கவலைப்படாமல் தமிழ்நாட்டின் கோரிக்கைகளுக்கு குரல் கொடுப்போம். வழக்குப் போடுவியா போடு… நாங்கள் பார்க்காத மிசாவா, தடாவா?” என்று பேசினார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *