
திருப்பதி கோயிலுக்குச் செல்லும் நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் பீதியடைந்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்றாடம் சாமி தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கோயிலுக்குச் செல்லும் அலிபிரி நடைபாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது.
இந்த நிலையல், நரசிம்ம சுவாமி கோயிலுக்கு அருகில் நேற்று இரவு சிறுத்தையைக் கண்ட பக்தர்கள் பீதியடைந்து அலறியுள்ளனர். எனவே, நடைபாதைகள் வழியாக திருமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி இரவில் பயணம் செய்யும்போது, பக்தர்கள் தனியாகப் பயணிக்காமல் குழுக்களாகச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சிறு குழந்தைகளுடன் பயணிப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் குழந்தைகளை கவனிக்காமல் விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
சிறுத்தை நடமாட்டத்தைத் தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவதுடன், சிசிடிவி கேமராக்கள் மூலம் வனவிலங்குகளின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அத்துடன் பக்தர்கள் எந்தவிதமான பதற்றத்தையும் சந்திக்காத. வகையில், பாதுகாப்பு ஊழியர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.



