
வறுமை பிடுங்கித்திங்கும் வாழ்க்கை வாய்க்கப் பெற்றாலும் மனிதர்கள் வெட்டி வைராக்கியத்தை விட்டுத் தொலைப்பதில்லை. பசி, மான அவமானம் பார்ப்பதில்லை என்பது மெய்தான். ஆனாலும் அதையும் கடந்து, தான் தனது என தனித்து நிற்கும் மனிதர்களால் நிறைந்ததே கரிசல்காடு. நிலமே மனிதர்களின் அகத்தை வடித்தெடுக்கிறது என்பது முற்றிலும் உண்மை. பள்ளிக்கூட வயதை மட்டுமே எட்டிய பிள்ளையாக இருந்த குழந்தைகள் சொன்ன சொல்லைக் கேட்கவில்லை என்பதற்காக தன்னுடைய மரணநாள் வரையிலும் அந்தக் குழந்தைகளின் மூஞ்சிலேயே முழிக்காமல் கிடந்த தந்தையர்கள் நிறைந்த நிலம் கரிசல். தந்தைகளைப் பின்னொற்றிக் கிடந்த தாய்கள் பிள்ளைகளா அல்லது புருஷனா என கலங்கிக்கிடக்கும் காட்சிகள் இந்த நிலத்தின் ஒருநூறு கதைகளுக்கான கட்சாப் பொருட்கள்.
யாவற்றையும் மீறித் தெறித்த வற்றாத அன்பால் வடித்தெடுக்கப்பட்ட மனுஷிகளும், மனிதர்களும் நிறைந்ததுதான் கரிசக்காடு. கரிசலின் கதைகள் முற்றிலும் மிக மிக தனித்தவை. கொஞ்சம் நிதானமாக யோசித்திருந்தால் எல்லாம் சரியாகிவிடும். ஆனால் அப்படி தந்தைகளை மனச் சமாதானம் ஆக விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் வைராக்கியம் எது?. குண்டி வேட்டிக்குக்கூட வக்காற்று இருக்கும் சூழலிலும் தான் பெற்ற பிள்ளைகள் தன்னுடைய உடமை, சொத்து எனும் நினைப்பு ஏன் இந்த அன்றாடங் காய்ச்சிகளை விட்டு அகலவேயில்லை. நிலத்தில் எத்தனையோ மாற்றங்கள் வந்தபோதும் ஏன் ஏழை, பாழைகளின் வாழ்க்கையில் சந்தோசப் பொழுதுகள் முகிழ்க்கவேயில்லை.
தாயும், மகளுமாக வாழ்ந்த அக்கா, தங்கைகள் உண்டு. அப்பாவும், பிள்ளையுமாக தங்களை வடித்துக்கொண்ட அண்ணன், தம்பிகள் உண்டு. எல்லா பிரியங்களுக்குப் பின்னால் இருக்கும் அதீத அன்பின் கரிசல் காட்டுக்கதையை கச்சிதமாக கண்டுபிடித்துவிட முடியுமா? எது இவர்களை இயக்குகிறது? வற்றிக்கொண்டிருக்கும் மனிதாயப் பண்புகளில் ஒன்று நேசித்தல். சக உயிர்களை நேசித்துக்கிடக்கும் மனிதர்கள் அற்றுப்போன சமகாலத்து நுகர்வுலக மனங்களில் நிறைய வேண்டிய கதை சேதாரம். எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமியின் மிகச்சிறந்த கதை ‘சேதாரம்’. கொள்ளிக்காட்டில் சீதை ஏய்ய் எந்திரவியம்மே எனக் கதறித் தெறிக்கும் காட்சியை எத்தனை முறை வாசித்தாலும் கண்ணீரோடுதான் கடக்க முடியும் எவராலும்.
அன்பு மயமானவர் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி. அவருடைய கதைகள் அவருடைய இயல்பினைப் போலவே சற்றே உரத்த குரலுக்குள் படர்பவை. அவரைப் போல மெய்யான அன்பு கொண்ட மனிதர்களைப் பார்ப்பது இப்போதெல்லாம் அபூர்வத்திலும் அபூர்வமாகிவிட்டது. தன்னையொத்த அன்பு மயமான மனிதர்களின் கதைகளையே எழுதியிருக்கிறார் எழுத்தாளர் த.கோ.ரா.. தமிழ்ச் சிறுகதைத் துறையில் கதை எழுதியதற்காக கடும் கண்டனங்களை எதிர்கொண்ட முதல் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமிதான். அவருடைய புகழ்பெற்ற கதையான நாரணம்மா வெளிவந்தபோது கதையை வெளியிட்ட பத்திரிக்கை அலுவலகத்தை நர்ஸ்கள் முற்றுகையிட்டிருக்கிறார்கள். அப்படித்தான் அப்போது பொதுமக்களிடம் அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கிய லஞ்சத்தின் அதீத சிக்கல்களை உள்ளடக்கமாக கொண்டு எழுதப்பட்ட‘கஸ்பா’ எனும் கதையை அரசு வேலை செய்து கொண்டிருந்த மத்திய தர வர்க்கத்தினர் மிகக் கடுமையாக எதிர்த்தனர்.
“எங்களை பணம் தின்னிக்கழுகுகள் என்று எழுதியிருக்கிறாரே எழுத்தாளர், இந்தக்கதையை ஏன் வெளியிட்டீர்கள். இதற்காக எழுத்தாளரும், பத்திரிகையும் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றெல்லாம்கூட சொல்லியிருக்கிறார்கள். ஒரு எளிய புன்னகையில் அதனை லகுவாக கடந்து போயிருப்பார் தனுஷ்கோடி என்பது அவரைத் தெரிந்த எல்லோருக்கும் தெரியும். அரசு ஆஸ்பத்திரியின் அவலங்களும் சரி, லஞ்ச லாவண்யங்களும் சரி இன்று வரையிலும் எழுதித்தீர்க்க முடியாததாகத்தான் இருக்கிறது. பசித்துக்கிடக்கும் ஊர் அது. அன்றாடங் காய்ச்சிகளின் வயிற்றை நிறைக்கும் சூட்சுமம் தெரிந்த ஊரும்கூட. பசியினூடே வாழப் பழகிக்கொண்ட மனிதர்கள் நிறைந்த நிலமும்தான் அது.
தனுஷ்கோடியின் கதைகள் எங்கும் பசி ஒரு வெள்ளை வெயிலைப் போல ஓடியபடியே இருக்கிறது. பசி எனும் இந்த உணர்வு மட்டுமே மனிதர்களின் பிரபஞ்ச அடையாளம். அதற்கு சாதியில்லை, மொழியில்லை, மதமில்லை, இனமில்லை, தேச பேதமில்லை ஏன் வர்க்க பேதம்கூட இல்லை. பசி மனிதர்களின் தனித்த அடையாளம். பசியின் கதையைப் பாடிய குலப்பாடகன் தனுஷ்கோடி ராமசாமியின் தனித்த கதை ‘சேதாரம்’. அது அவருடைய ஆகச் சிறந்த கதை மட்டுமல்ல. தமிழின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று.
தோழிகளைப் போல பாந்தமாக தங்களுக்குள் ஒட்டி உறவாடுகிற இரண்டு சகோதரிகளின் கதை ‘சேதாரம்’. “சீதை, சீதைங்கிற பேரு அவளுக்குத்தான் செல்லும். அப்படி ஒருத்தி எங்க அக்கா சீதை. ”.கதையின் முதல் வரியிலேயே கதையின் மையத்தை கவனப்படுத்திடும் வழக்கம் கொண்டவர் எழுத்தாளர த.கோ.ரா. . அப்படியானால் கதை சீதை எனும் சிறு பெண் குழந்தையைப் பற்றியதா? என்றால். ஆமாம் சீதையைப்பற்றியது தான். ஆனால் சீதையைப் பற்றியது மட்டுமல்ல. அவளுடைய தங்கை ராமுத்தாயையும் பற்றியது. கதையின் முதல் பகுதியில் ராமுத்தாய் தன்னுடைய அக்காவான சீதாவின் தனித்த பெருமைகளைச் சொல்வதாக கதை துவங்குகிறது. அதுவும் அக்கா சீதை பள்ளிக்கூடம் போய் படிப்பது பற்றிய கனவினை விளக்கும் காட்சிகள் ஒரு ஆசிரியையால் அவளுக்குள் விளைந்தது என்கிறாள்.
அந்த டீச்சர் பக்கத்து ஊரில் டீச்சராக வேலை பார்க்கிறார். நானும் அவரைப் போலவே பி.எட் டீச்சாராவேன் என்கிறாள் அக்கா. அதற்கு “நம்ம ஊர்ல இருக்கிற ஸ்கூல்ல எட்டுவரை படிக்கனும். அப்புறம் ஒன்பது பத்து வகுப்புகள் பூனாபுரத்தில படிக்கனும். அப்புறம் பதினொன்னுக்கு டீச்சர் வேலைபார்க்கிற கான்வென்ட் ஸ்கூலுக்கு போயி படிக்கனும். .இது எல்லாத்துக்கும் அந்த டீச்சரே ஸ்காலர்ஷிப் ஏற்பாடு பன்னுவதா சொல்லியிருக்காங்க. நம்ம அய்யா கொஞ்சங்கானும் ரூபா கொடுத்தா போதும்” என்கிறாள். அவள் கல்வியில் பெரும் விருப்பம் கொண்டவள் மட்டுமல்ல. வகுப்பில் முதல் மாணவியும்தான். அவளுடைய அறிவின் ஆற்றலை காட்டிட எழுத்தாளர் அந்நாளைய பள்ளிக்கூட ஆய்வு நாளைக் காட்சிப்படுத்துகிறார்.
ஆய்வு செய்ய வந்த கல்வி அதிகாரி கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறவளாக சீதையே இருக்கிறாள். ஒரு கட்டத்தில் வகுப்பறை சீதைக்கும் கல்வி அதிகாரிக்கும் போட்டி நடைபெறும் இடம் போல மாறிவிட்டது. கடைசிக் கேள்விக்கு சீதை சொன்ன பதில் தவறு எனச் சொல்லிவிட்டு அதிகாரி தலைமையாசிரியர் அறைக்குள் போய்விட்டார் .. சீதை விடவில்லை. புத்தகத்தை எடுத்துக்கொண்டு போய் அதிகாரியிடம் காட்டுகிறாள். தான் சொன்ன விடையே சரி என்கிறாள். அதிகாரி சீதை சொனனதே சரி என்கிறார். பள்ளிக்கூடமே எழுந்து நின்று கைதட்டுகிறது. ராமுத்தாய்க்கு இந்த சம்பவமும் அது உருவாக்கிய விளைவுகளும் ஆழமாக மனதினில் பதிந்து விடுகிறது.
ஓரு போதும் வெம்பரப்பாக கிடக்கும் பூமியின் மக்கள் நச்சுப்புடுங்கும் வறுமையில் இருந்து வெளியேறிட வழிவகை தெரியாமல் திகைத்து நின்றபோதுதான் அங்கே தீப்பெட்டித் தொழிற்சாலைகளும், பட்டாசுக் கம்பெனிகளும் முளைத்தன. பள்ளிக்கூடம் செல்வதா அல்லது தீப்பெட்டித் தொழிற்சாலைக்குப் போவதா எனும் பதைபதைப்பு அன்று கரிசல் கிராமங்களின் நிதர்சனமாக நீடித்திருந்தது. உழுது களைத்த விவசாயிகள் ஆம்பிளைப் பசங்கள், பள்ளிக்கூடத்திற்கும் பெண் குழந்தைகள் பட்டாசு, தீப்பெட்டிக் கம்பெனிகளுக்கும் அனுப்பி வைத்தனர். சீதையின் அண்ணனை மாட்டை விற்று கல்லூரிக்கு அனுப்பி வைத்த அவளின் தந்தை சீதையையும் ராமுத்தாயையும் எந்தவிதக் குற்ற உணர்ச்சிக்கும் ஆட்படாமல் தீப்பெட்டி கம்பெனிக்கே அனுப்பி வைக்கிறார். பசியைக் கடந்து மேலேறிட அந்தக் குடும்பத்திற்கு வேறு எந்த வழிவகையும் இல்லை என்பதே யதார்த்தம். பல பெண் குழந்தைகளின் கல்வி கனவினை காவு வாங்கிடும் ராட்சசனாக தீப்பெட்டி பட்டாசுக் கம்பெனிகள் இன்றுவரையிலும் கரிசல் நிலத்தில் இருந்து வருகின்றன.
சீதை விருப்பமில்லாமலே தீப்பெட்டி கம்பெனிக்குப் போகிறாள். பெண்கள் பணி செய்யுமிடங்களில் ஆண்கள் எவ்வளவு வக்கிரமாக நடந்து கொள்வார்களோ அப்படித்தான் தீப்பெட்டி ஆபீஸிலும் நடக்க முயற்சி செய்கிறார்கள். பாலியல் வக்கிரமும், வன்முறைகளும் துருத்திக் கிடக்கிற பட்டாசு தீப்பெட்டி கம்பெனிகளில் கால் தரித்திருக்க முடியவில்லை சீதையால். நாலு தீப்பெட்டிக் கம்பெனி மாறிவிட்டாள். கடைசியாக வந்த ஆபீஸில்தான் அவனைப் பார்த்தாள். எந்த ஒரு பெண்ணும் வழக்கம் போல இல்லாத மனிதனின் மீதே நேசம் கொள்வாள். அப்படித்தான் பெண்களின் மீது மரியாதையும் பாந்தமும் கொண்ட இளைஞனின் மீது சீதைக்கு விருப்பம் ஏற்படுகிறது. அடுத்த நொடியிலேயே ராமுத்தாய் அந்த இளைஞனை மச்சானாக உருவகித்துக் கொள்கிறாள். ஏன் தெரியுமா? அவளைப் பொறுத்தவரை அக்கா சீதை எப்போதும் நல்லதை மட்டுமே செய்வாள். சீதையின் முடிவு எதுவும் தவறாகவே இருக்காது என்பதே ராமுத்தாயின் எண்ணம்.
ஆனால், வைராக்கியம் பிடிச்ச மனுஷன் அவர்களுடைய தந்தை. நேசமிகு மனிதனோடு சீதை இடம் பெயர்ந்ததைச் சகிக்க முடியாத அவர்களுடைய தந்தை வீட்டிற்கு வந்து எல்லாக் குழந்தைகளையும் அழைக்கிறார் “நல்லா கவனிங்க சீதா செத்துப் போனா, இனிமே அவ இங்க வரப் போறதில்ல, எல்லோரும் அவள தலைமுழுகிறுங்க” என அவர் எல்லார் தலையிலும் எண்ணெய் வைக்கிறார். ராமுத்தாய் மட்டும் அதற்கு சம்மதிக்கவில்லை. எங்க அக்கா சீதை எதையுமே தப்பா செய்ய மாட்டா. அவ செஞ்சது சரிதான் என்கிறாள். ஆனாலும் அவளுடைய அப்பா அவள் தலையிலும் எண்ணெய் ஊற்றி தலை முழுகிவிட்டார். அவரைப் பொறுத்தவரை மகள் சீதா செத்துப் போனாள் அவ்வளவே.
ராமுத்தாய் அக்காவைத் தேடி அவளும் மச்சானும் குடியிருக்கும் கிராமத்திற்கே போகிறாள். அவர்களைப் பார்த்த உடனே பதறிவிட்டாள். இற்று உருக்குலைந்து போயிருந்தார்கள் இருவரும். ஆன சாப்பாடு சாப்பிட்டிருக்க மாட்டார்கள் என்பதை அவள் பார்த்த உடனே புரிந்து கொண்டாள். தங்கையும் அக்காவும் ஆவி சேர்ந்து பிடித்து கண்ணீர் விட்டு அழுதார்கள். சொல்லாமல் விட்ட வார்த்தைகளுக்கு ஒரு கோடி அர்த்தம் இருக்கத்தானே செய்யும். கண்ணீர் மல்க வீடு வந்து சேர்ந்த ராமுத்தாயை அவர்களுடைய அப்பா அடித்து துவைத்துவிட்டார். கண்ணீர் வற்றிப்போன அவளுடைய கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை. ஆனால் வாய் மட்டும் சொல்லிக்கொண்டே இருந்தது. அக்கா சீதை எந்நநாளும் தப்பே செய்யமாட்டாள். அவ எது செஞ்சாலும் ரைட்டாத்தான் இருக்கும். சீதை தப்பு செய்ய மாட்டா. சீதை தப்பு செய்ய மாட்டா. அவள் சொல்லச் சொல்ல முரட்டுத் தகப்பனின் மூர்க்கம் கூடுகிறது. அவளை சாட்டைக் கம்பு பிஞ்சி தூள் தூளாகும் வரையிலும் அடி அடின்னு அடித்து துவைத்துக் கொண்டேயிருந்தார். ராமுத்தாய் அக்கா தப்பு செய்ய மாட்டா அவ ரொம்ப நல்லவ என்பதை மட்டும் நிறுத்தவேயில்லை. இதுவே கதைக்குப் போதுமானதுதான். ஆனால் எழுத்தாளர் அப்படி நினைக்கவில்லை. இன்னும் வற்றாத அன்பினை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்று நினைத்திருக்கிறார் அதன்பிறகு நகரும் கதையின் காட்சிகள் காவியத்தன்மையிலானவை. அந்தக் காட்சிகளே சேதாரம் கதையை கிளாஸிக்கல் சிறுகதையாக உருமாற்றி விடுகிறது.

கொள்ளிவாய் ஓடையில் பிணத்தை எரிக்கப் போகிறார்கள் என்றாலே அது இயல்பான மரணம் இல்லை. ஒன்று ஆக்ஸிடன்ட் கேஸாக இருக்க வேண்டும் அல்லது தற்கொலையாக இருக்க வேண்டும். ஓடையின் கரையில் ஒதுங்கி தலை கவிழ்ந்து எவர் மூஞ்சிலும் முழிக்க வகையின்றி தனித்தொதுங்கி நிற்கிறான் தந்தை. எரியக் காத்திருக்கிறாள் தங்கை ராமுத்தாய். வாயும் வயிறுமாக கூக்குரல் கொண்டு அழுது ஒப்பாரி வைக்கிறாள் சீதா. “எப்பா பிள்ளைத்தாச்சிய பிடிங்கப்பா… அவளும் செத்து கித்து போயிரப் போறா” என்கிறது ஊர். என்ன நடந்தது என்பதை சீதையே கண்ணீரும் கம்பலையுமாக வாசகனுக்குச் சொல்வதாக எழுத்தாளர் எழுதியிருக்கிறார்.
“நான் திரும்ப திரும்ப கேட்டேனே, அய்யாதாங்க உனக்கு ஐம்பது ரூபாயை தீபாவளிக்காசா தரச் சொன்னாரு, நல்ல ஆஸ்பத்திரியில போய் அவள பிரசவம் பார்க்கச் சொல்லுன்னும் சொனன்னாருன்னு எங்கிட்ட பொய் சொல்லிட்டியேடி. இரக்கமில்லாத அப்பன் ஐம்பது ரூபாய் போனஸ் காசு எங்கன்னு கேட்டு அடிச்சே கொன்னுப்புடுவாருன்னு நீயே முந்திக்கிட்டியாடின்னு” கதறுகிறாள் சீதை. இப்பிடி கொள்ளிவாய் ஓடையில பொசுங்கவாடி நீயும் நானும் உடம்பிறந்தோம்னு கத்திக் கூப்பாடு போடுறா. ஏந்திரவியமே என்னப் பெத்தாரு எந்திரிச்சி வாடி ராமுன்னு சீதை கதறிய குரல் கண வெளியெங்கும் நிறைந்தது. எளிய மனிதர்களின் அன்பை எழுத்தாக்கிட முடியாமல் தடுமாறி கலங்குகிறது எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமியின் சொற்கள். நாமும்தான் அவரோடு சேர்ந்து கலங்கிப் போகிறோம்.
–ம.மணிமாறன் ( தொடரும்)
இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88 இந்த லிங்கை கிளிக் செய்யவும்.



