இசைக்குயில் எஸ்.ஜானகி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தலைச்சிறந்த பின்னணி பாடகியான எஸ். ஜானகி வயது மூப்பு காரணமாக மைசூருவில் நேற்று காலமானார். மறைந்த எஸ். ஜானகியின் உடல் இன்று (ஜூலை 12 ) பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைக்கப்படுகிறது. இன்று பிற்பகல் 3 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கனியனகுந்தி என்ற இடத்தில் இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு ஜானகியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர் எஸ்.ஜானகியின் மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், எஸ்.ஜானகி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
இதுதொடர்பாக மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “பாடகி ஜானகி அம்மா மறைவு இசை மற்றும் கலாச்சார உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. பல்வேறு மொழிகளில் அமைந்த அவரது பாடல்கள், தலைமுறை தலைமுறையாகப் பிரபலமாக இருந்தன. அவை ஈடு இணையற்ற நளினத்துடனும் பன்முகத்தன்மையுடனும் ஒவ்வொரு உணர்விற்கும் குரல் கொடுத்தன. அவரது மெல்லிசை, வரும் ஆண்டுகளிலும் கேட்போரைத் தொடர்ந்து வசீகரிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் மற்றும் ஒட்டுமொத்த இசை உலகினருக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விஜய்
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், எஸ்.ஜானகி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார். அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்”. என்று கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “இசைக்குயில் எஸ்.ஜானகி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் முதல் அனிருத் வரை ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய கானகோகிலம் ஜானகி இசைப்பயணம் மிக நீண்டது. அவரது மறைவு என்பது, வானொலி தொடங்கி ஸ்பாட்டிஃபை வரையில் அவரது அமுதகானங்களைத் தங்கள் இல்லங்களில் ஒலிக்கவிட்டு இரசிக்கும் தமிழ்நாட்டு மக்கள் உள்ளிட்ட தென்னிந்திய மக்களுக்கும், இந்தியத் திரைத்துறைக்கும் பேரிழப்பாகும்.

இனிமையும், இளமையும் மாறாத தனது குரலால் காலத்தால் அழியாத பாடல்களைப் பாடிய அவர், என்றும் நம் இல்லங்களிலும் நெஞ்சங்களிலும் ஒலித்துக்கொண்டே இருப்பார். அவரது மறைவால் வாடும் திரைத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள், இரசிகர்கள், அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *