
இந்தியாவின் பொருளாதாரம் ஒருபுறம் வளர்ந்து வருகிறது. மறுபுறம், இந்தியா மீதான உலகின் நம்பிக்கையும் அதிகரித்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
டெல்லியில் உள்ள யஷோபூமி வளாகத்தில் 3 நாட்கள் நடைபெறும் ‘செமிகான் இந்தியா – 2026’ மாநாட்டை பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 17) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் செமிகண்டக்டர் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. செமிகண்டக்டர் உற்பத்தியின் முனையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
இதுவரை நாட்டில் 12 செமிகண்டக்டர் உற்பத்தித் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், சிப் உற்பத்திக்கான புதிய மற்றும் நம்பகமான உற்பத்தி மையங்களை உருவாக்கி, இந்தியா தன்னைத் தயார்படுத்தி வருகிறது.
இந்தியாவின் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி அறிக்கை செப்டம்பர் மாதத்திலேயே வெளியிடப்பட்டது. இந்த சவாலான காலக்கட்டத்திலும் இந்தியா 7.8 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. இதே காலகட்டத்தில், ஜப்பானின் கடன் மதிப்பீட்டு நிறுவனம் இந்தியாவின் அரசுக் கடன் மதிப்பீட்டை உயர்த்தியுள்ளது. இது கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, அதாவது சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது. ஒருபுறம், இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. மறுபுறம், இந்தியா மீதான உலகின் நம்பிக்கையும் அதிகரித்து வருகிறது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு நிறைவடைந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் இந்த நம்பிக்கையின் மற்றொரு முக்கிய அம்சம் வெளிப்பட்டது. இந்தியா இந்த உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதும், அனைவரின் ஒருமித்த கருத்துடன் டெல்லி பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், இந்தியா மீதான உலகின் நம்பிக்கைக்கு மற்றொரு முக்கிய சான்றாகும்” என்றார்.



