
ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு ஆர்சிபி முன்னேறியது.
இமாச்சலப்பிரதேசம் மாநிலம் தர்மசாலாவில் ஐபிஎல் 2026 டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது பிளேஆஃப் சுற்றுப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் நேற்று ( மே 26) இரவு மோதின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெங்கடேஷ் அய்யர் (19), விராட் கோலி (43) ஆகியோர் சிறப்பான துவக்கம் கொடுத்தனர். இவர்களைத் தொடர்ந்து விளையாடிய தேவ்தத் படிக்கல் 19 பந்துகளில் 30 ரன்களும், கேப்டன் ரஜத் பட்டிதார் 33 பந்துகளில் 93 ரன்களும் விளாசினர். க்ரூணால் பாண்டியா 28 பந்துகளில் 43 ரன்களை விளாச ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ரன்களை குவித்தது.
இந்த இமாலய ஸ்கோரை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்சன் 14 ரன்களிலும், சுப்மன் கில் 2 ரன்களிலும், நிஷாந்த் சிந்து 5 ரன்களிலும், வாஷிங்டன் சுந்தர் 8 ரன்களிலும், ஜேசன் ஹோல்டர் டக் அவுட் என அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். ஜாஸ் பட்லர் 29 ரன்கள் எடுத்தார். 19.3 ஓவர்களில் 162 ரன்களுக்கு குஜராத் அணி ஆல்-அவுட் ஆனது. அந்த அணியின் ராகுல் தேவாட்டியா 43 பந்துகளில் 68 ரன்களை குவித்தார்.
இதனால் 92 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பெங்களூரு அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜேக்கப்
டஃபி 3 விக்கெட்களையும், புவனேஷ்வர் குமார், ரசிக் சலாம், க்ரூணால் பாண்டியா தலா 2 விக்கெட்களையும், ஜோஷ் ஹேசில்வுட் 1 விக்கெட் வீழ்த்தினர்.
ஆர்சிபி புதிய சாதனை
இந்த போட்டியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் பிளே ஆஃப் சுற்றில் 254 என்ற அதிக ஸ்கோர்களை குவித்தது என்ற பெருமையை ஆர்சிபி பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி 233 ரன்கள் அடித்ததே, பிளே ஆஃப் சுற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.அதை ஆர்சிபி முறியடித்துள்ளது.
புதிய மைல்கல்
இந்த போட்டியில் விராட் கோலி புதிய சாதனையைப் படைத்துள்ளார். அவர் 25 பந்துகளில் 43 ரன்கன் எடுத்தார். இதன் மூலம் 2026 ஐபிஎல் தொடரில் அவர் 600 ரன்களை குவித்ததன் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ஒரு ஐபிஎல் சீசனில் 600 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை விராட் கோலி ஆறாவது முறையாக எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரின் வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரரும் தொடர்ச்சியாக ஆறு முறை 600 அல்லது அதற்கும் அதிக ரன்களை குவித்ததில்லை.
கடந்த 2025 ஐபிஎல் தொடரில் விராட் கோலி 657 ரன்கள் குவித்தார். அதற்கு முன்பாக, 2024 ஐபிஎல் போட்டியில் 741 ரன்கள், 2023 ஐபிஎல் போட்டியில் 639 ரன்களைக் குவித்துள்ளார். இதுதவிர 2016 ஐபிஎல் போட்டியில் 937 ரன்களும், 2013 ஐபிஎல் போட்டியில் 634 ரன்களையும் விராட் கோலி எடுத்துள்ளார்.



