
ஜனநாயகத்துடன் மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கைகளுடன் இந்த அரசு நடக்கும். என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக, அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு சட்டப்பேரவையில் இன்று (மே 13) நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 144 வாக்குகள் பெற்று தவெக அரசு வெற்றி பெற்றது. இதன் பின் முதலமைச்சர் விஜய் பேசுகையில், “ நம்பிக்கை தீர்மானத்தில் மக்களுக்கான இந்த ஆட்சியை மனசாட்சி உள்ள மக்களாட்சியை ஆதரித்து வெற்றி பெற செய்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை நமது அரசின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் எந்த அணியும் இல்லாமல் தனி அணியாக, தனி சிறப்புமிக்க அணியாக, மக்கள் அணியாக, மக்களை விரும்பும் அணியாக, மக்கள் விரும்பும் அணியாக களம் கண்டோம்.
1967 மற்றும் 1977 தேர்தல்கள் வாயிலாக அமைந்த சாமானியர்களின் அரசை போலவே 2026 சட்டமன்ற தேர்தல் வாயிலாக தமிழக வெற்றிக் கழகமும் சாமானியர்களின் அரசையே அமைக்கும் என்று மக்களிடம் தீர்மானமாக கூறினோம். மக்களும் நம் மீது நம்பிக்கை வைத்து தீர்மானமாக வாக்களித்தனர். வாகை சூடும் அந்த வரலாறு திரும்பியது. விசில் அலை வெற்றி அலையாக மாறியது. ஒரு விரல் புரட்சி, விசில் புரட்சியானது.
கட்சி ஆரம்பித்த மூன்றே ஆண்டுகளுக்குள் 34.92 சதவீதத்துடன் ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 208 வாக்குகளை மக்கள் தந்தனர். தமிழக வெற்றிக் கழகத்தை தனிப்பெரும் கட்சியாக சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தனர். கட்சி ஆரம்பித்த மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே மிக மிக சிறிய அளவில். ஒரு நூலிழையில் தனிப்பெரும்பான்மை கொஞ்சம் தள்ளிப் போயிருக்கிறது. அதனால், இந்த அரசை சிறுபான்மை அரசு போல யாரும் நினைத்தால், அதிலும் எங்களுக்கு மகிழ்ச்சியே. நாங்களே சொல்கிறோம். இது சிறுபான்மை அரசுதான். சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பை உண்மையாக நிலைநாட்டும் அரசுதான்.
அதுமட்டுமல்ல, பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் என அனைத்து மக்களுக்குமாக அமைந்த அரசுதான் இந்த அரசு. அந்த நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டதால்தான் இந்த நம்பிக்கை தீர்மானத்தில் அது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த மக்கள் அரசு மனசாட்சி உள்ள மக்களாட்சியை தரும் என்று உறுதி அளிக்கிறேன். சமூக நீதி, சம நீதி, சம வாய்ப்புடன் உண்மையான உறுதியான ஜனநாயகத்துடன் மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கைகளுடன் இந்த அரசு நடக்கும். அதில் சிறிதும் மாற்றமில்லை. நம்முடைய இந்த ஆழமான நம்பிக்கையை மனதார நம்பி வாக்களித்த அனைத்து இயக்கங்களின் தலைவர்களுக்கும், அந்த இயக்கங்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எம்மதமும் நம் மதமே. எல்லா மக்களும் நம் மக்களே. இதில் வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாகுபாடே இருக்காது. இது எல்லோருக்குமான அரசு. இது சாமானியர்களுக்கான அரசு. இது சாதி, மத எல்லைகளை கடந்த அரசு. இது பாகுபாடு காட்டாத அரசு. இது பண்பாடு காக்கும் அரசு. இது பண்பட்ட அரசு. அரசியல் காரணங்களுக்காக யாரையும், எதற்காகவும் புண்படுத்தாத அரசு. இதை எல்லாம் போகப்போக புரிந்து கொள்வார்கள்.
எனவே, துள்ளி எழுந்து பதில் சொல்வதை விட எதிலும் துணிச்சலுடன் செயலாற்றி வெற்றி பெறும் அரசு. இது பதவிக்காக, அதிகாரத்துக்காக அமைந்த அரசு அல்ல. நம்பிய மக்களுக்கு நன்றி கடன் செலுத்துவதற்காக அமைந்த அரசு. அதிகாரம் காட்டி மிரட்டும் அரசு அல்ல. அனைவரையும் அரவணைக்கும் அரசு. எவர் மீதும் வெறுப்பு காட்டும் அரசு அல்ல. எல்லோரையும் விரும்பும் அரசு. மக்களே முக்கியம். மக்கள் நலன் மட்டுமே முக்கியம். அதுவே எங்கள் ஒரே நிலைப்பாடு. எனவே, மனசாட்சி உள்ள மக்களாட்சிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.



