
அமெரிக்கா – ஈரான் யுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று அதிகாலை கையெழுத்தாகியுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கியது. இதில் அந்நாட்டின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். மேலும், 160-க்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் அமெரிக்க ஏவிய ராக்கெட்டுகளால் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் தங்களின் அண்டை அரபு நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், அபுதாபி, துபாய், ஒமான் போன்ற இடங்களில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கியதுடன், உலக நாடுகளின் கடல் வணிகத்திற்கு பெரிதும் பயன்படும் ஹார்முஸ் நீரிணையை மூடியது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் உலக முழுவதும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்தது.
இந்த நிலையில், இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகளும் முயற்சிகள் மேற்கொண்டன. இந்நிலையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரானின் தலைமை பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் காலிபாப் ஆகியோர் முதல் கட்டமாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 14-ம் தேதி கையெழுத்திட்டிருந்தனர். இதன் அடுத்த கட்டமாக அமெரிக்கா, ஈரான் அதிபர்கள் டிஜிட்டல் முறையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனுடன் வெர்சாய்ஸ் அரண்மனையில் இரவு உணவு அருந்திக்கொண்டிருந்த டிரம்ப், அங்கேயே ஒப்பந்தத்தின் நகலில் கையெழுத்திட்டார்.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈரானின் கச்சா எண்ணெய் விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. முடக்கப்பட்ட ஈரானிய நிதிகள் விடுவிக்கப்படும். அடுத்த 60 நாட்களுக்குள் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஈரான் தாராளமாக எண்ணெய் ஏற்றுமதி செய்யலாம். உலக நாடுகளின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் முக்கியமான ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுகிறது. இதில் ஈரான் மற்றும் ஓமான் நாட்டின் கட்டுப்பாடுகள் தொடரும். போரினால் பாதிக்கப்பட்ட ஈரானின் உட்கட்டமைப்பை மேம்படுத்த சுமார் 300 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்த நடவடிக்கையை பிரான்ஸ் குடியரசுத் தலைவர் இம்மானுவேல் மேக்ரூன் வரவேற்றுள்ளார். ஹார்முஸ் நீரிணையை திறக்கவும், அமைதியை நிலைநாட்டவும் இந்த ஒப்பந்தம் உதவியாக இருக்கும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, “இருநாட்டு தலைவர்களின் கையெழுத்துகளுடன் அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளார். இந்த தகவலை அந்நாட்டு அரசின் செய்தி ஊடகமான ஐஆர்என்ஏ வெளியிட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா-ஈரான் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வரும்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போர் நிறுத்தம் மூலம் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் கட்டுக்குள் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



