
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியின் வைபவ் சூரியவன்ஷி புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் நேற்று (மே 27) இரவு நடைபெற்றது. நியூ சண்டிகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி ரன்மிஷினாக மாறி ஹைதராபாத் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தார். 16 பந்துகளில் அரைசதம் விளாசிய வைபவ், 29 பந்துகளில் 97 ரன்களைக் குவித்தார். இதில் 12 சிக்சர்கள் அடங்கும். மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் அவர் அடித்த பந்துகள் பறந்தன. ராஜஸ்தான் அணியின் மற்றொரு வீரர் ஜூரல் 20 பந்துகளில் அரை சதம் விளாசினார். அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 243 ரன்களைக் குவித்தது.
இந்த கடினமாக இலக்கை எதிர்கொண்ட ஹைதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அவரை தொடர்ந்து ஹெட் 17 ரன்களிலும், இஷான் கிஷன் 33 ரன்களிலும், நிதிஷ்குமார் 38 ரன்களும், சலில் அரோரா 35 ரன்களும் எடுத்தனர். அந்த அணி 19.2 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.இதனால் 47 ரன்களில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் 2வது தகுதி சுற்றுப் போட்டியில், குஜராத்தை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம்வீரர் வைபவ் சூர்யவன்ஷி புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் ஒரே சீசனில் அதிக சிக்சர்கள் விளாசிய கிறிஸ் கெயிலின் சாதனையை வைபவ் முறியடித்துள்ளார். கெயில், கடந்த 2012-ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய போது 59 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
இந்த நிலையில், நேற்றைய போட்டியில் 12 சிக்சர்களை அடித்து 65 சிக்சர்களுடன் ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சூரியவன்ஷி படைத்துள்ளார். அத்துடன் 15 வயதிலேயே டி20 தொடரில் 600 ரன்கள் எடுத்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையையும் வைபவ் சூரியவன்ஷி பெற்றுள்ளார். அவருக்கு முன்பாக 2019-20-ம் ஆண்டு சையத் முஷ்டாக் அலி கோப்பைத் தொடரில் கர்நாடக அணிக்காக விளையாடிய தேவ்தத் படிக்கல் 580 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அப்போது படிக்கலுக்கு 19 வயது. ஆனால், 15 வயதிலேயே அந்த சாதனையை வைபவ் முறியடித்துள்ளார்.
மேலும் ஐபிஎல் பிளேஆஃப் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் வைபவ் பெற்றுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா 2014 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்க் அணிக்கு எதிராக ரெய்னா 16 பந்துகளில் அரைசைதம் அடித்திருந்தார். தற்போது அந்த சாதனையையும் வைபவ் சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



