
சாத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் வீட்டில் 122 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் கடற்கரை ராஜ் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சத்திரப்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் நேற்று (ஏப்ரல் 13) பரப்புரை செய்தார்.
இந்த பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திமுக வேட்பாளர் கடற்கரை ராஜ் சென்றிருந்தார். அந்த நேரத்தில் அவரது வீட்டில் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், அவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், கடற்கரை ராஜ் வீட்டில் இருந்த 122 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



