விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 18 பேர் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான இந்த ஆலையில் முப்பதுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில், பட்டாசு தயாரிப்பின்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக பட்டாசுகள் வெடித்து சிதறின. இதனால் பட்டாசு ஆலையில் உள்ள நான்கு அறைகளும் முற்றிலும் சேதமடைந்தன. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி, சாத்தூர், விருதுநகர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில், மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழந்துள்ள துயரச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மீட்புப் பணிகளை விரைவுபடுத்திக் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரையுமாறு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரைக் கேட்டுக்கொண்டுள்ளேன். இதுகுறித்து அறிந்ததுமே மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க அறிவுறுத்தியுள்ளேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *