
மகாராஷ்டிராவில் அதிவேகமாக வந்த லாரி மோதி கார் தீப்பிடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம், வார்தா மாவட்டத்தில் சம்ருத்தி விரைவுச்சாலை உள்ளது. இவ்வழியே நாக்பூர் நோக்கி சென்ற லாரி, புல்கான் பகுதியில் இன்று (ஜூலை 20) அதிகாலை சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த லாரி காரின் பின்புறம் அதிவேகமாக மோதியது. இதனால் கார் உடனடியாக தீப்பிடித்து எரிந்தது. இதில் காரில் இருந்த நான்கு பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் லாரியின் ஓட்டுநரும் படுகாயமடைந்து உயிரிழந்தார். தகவல் அறிந்த நெடுஞ்சாலைக் காவல்துறையினரும், புல்கான் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டதுடன், போக்குவரத்துச் சீரமைப்புப் பணிகளிலும் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த லாரியின் கிளீனரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காரில் உயிரிழந்த அனைவரும் வார்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக புல்கான் கிராமப்புற மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், விபத்து நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அதே இடத்திற்கு அருகில் எத்தனால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்துள்ளது. இதனால் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டிருந்தது. இதனால் போக்குவரத்திற்கு ஒரே ஒரு வழித்தடம் மட்டும் திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் சரக்கு லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து காரில் மோதியது தெரிய வந்துள்ளது.



