
மும்பையில் கனமழையால் கட்டிடம் இடிந்ததில் 5 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் மன்குர்த்பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது. அப்போது அனுமன் கோயில் அருகே ஜந்தா நகர் சால் எண் 5-ல் நேற்று இரவு மூன்று வீடுகள் இடிந்து விழுந்தன. தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்புப்படை, தீயணைப்பு படையினர், மும்பை மாநகராட்சி அதிகாரிகள், போலீஸார் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகள், ஒரு பெண் என 6 பேர் உயிரிழந்தனர்.

மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் வீடு இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்,டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மும்பை மேயர் ரிது தாவ்டே மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு அவர் , கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இடிந்த மூன்று மாடி கட்டிடத்தின் ஒரு பகுதியாக இருந்த இரண்டு அல்லது மூன்று வீடுகள் இடிந்து விழுந்ததால் 6 பேர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.



