திடீரென சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்து 6 பேர் பலி… 2 பேர் மாயம்

உத்தாரகண்ட்டில் சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் பிப்பல்கோட்டியில் தெஹ்ரி நீர்மின் மேம்பாட்டு கழகம் சார்பில் சுரங்கப்பாதையில் நேற்று இரவு 18 தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டு இருந்தனர். அப்போது சுரங்கத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தண்ணீரின் வேகத்தில் தொழிலாளர்கள் அனைவரும் சுரங்கத்தின் நுழைவு வாயிலுக்கு அடித்துச் செல்லப்பட்டனர்.

அதில் 8 பேர் மீட்கப்பட்ட நிலையில், 8 பேர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் பல்வேறு அமைப்புகள் விரைந்தன.. நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இதுவரை 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மாயமான 2 பேரை மீட்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் 14 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் மற்றும் ராணுவ குழுக்களும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டன. மாவட்ட மாஜிஸ்திரேட் (டிஎம்) கௌரவ் குமார் சம்பவ இடத்திற்கு வந்து முழு நடவடிக்கையையும் மேற்பார்வையிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உத்தாரகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், போர்க்கால அடிப்படையில் நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். பிப்பல்கோட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்த தொழிலாளர்களுடன் பேசியுள்ளதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தாமி கூறியுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *