ஒவ்வொரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.10,000: எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி!

எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏற்கெனவே இரண்டு கட்டங்களாக தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மு.க. ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசில் அத்தியாவசியப் பொருள்களின் விலை விஷம்போல ஏறியுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் ஆகியவை திமுக அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது.

எனவே, மக்களின் இந்த சுமையைக் குறைக்கும்பொருட்டு வரும் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைந்தபிறகு ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத்தொகையாக ரூ. 10,000 வழங்கப்படும். அத்துடன் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும். 12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ. 1,000 வழங்கப்படும். மீன்பிடித் தடை காலங்களில் மீனவர்களுக்கு தற்போது ரூ. 8,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இது அதிமுக ஆட்சி அமைத்த பிறகு ரூ.12,000 ஆக உயர்த்தப்படும்.

மேலும் தைப்பொங்கலையொட்டி பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்த்தப்படும். விசைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரம் 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாக உயர்த்தப்படும். நகரப் பகுதிகளில் நடைபாதையில் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்” என்று கூறினார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *