
தவெகவுக்கு ஆதரவு இல்லை என்று ஐயூஎம்எல் அறிவித்துள்ளதால் விஜய் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று நடிகர் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால், ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தனது 5 சட்டமன்ற உறுப்பினர்களுடன் தவெகவுக்கு ஆதரவு அளித்து. இதனைத் தொடர்ந்து விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியது.அத்துடன் விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் ஆகிய தலைவர்களை நேரில் சந்தித்தும் தவெக ஆதரவு கோரியது.
இதையடுத்து சிபிஐ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தவெகவுக்கான ஆதரவை நேற்று (மே 8) தெரிவித்தன. அத்துடன் சிபிஐ, சிபிஐஎம் ஆகிய கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கடிதம் வழங்கினர். இந்த நிலையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி(ஐயூஎம்எல்), தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும், அதனால் ஆதரவு எண்ணிக்கை 120 ஆகிய அதிகரித்ததாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க விஜய் நேற்று வலியுறுத்தினார்.
இந்த நிலையில், தவெகவுக்கு ஆதரவில்லை என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கூறியுள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் மாநில முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “தவெக ஆதரவு இல்லை. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவுக்கு விசிக இன்னும் ஆதரவு கடிதம் அளிக்கவில்லை. இதனால் தவெகவிற்கு தற்போது 116 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படுகிறது. இதனால் விஜய் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விசிக ஆதரவு அளித்தால், தவெக ஆட்சியமைக்கும் என்று தெரிகிறது.



