
நயினார் நாகேந்திரன்
வி.பி.துரைசாமி அமைச்சராவார் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரையில் பாஜக மாநில தேர்தல் அலுவலகத்தை இன்று(பிப்ரவரி 26) முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் றந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். இப்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியை அகற்ற மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். இது மக்களுக்கான ஆட்சியாக நடைபெறவில்லை. குடும்ப ஆட்சியாக செயல்படுகிறது.
இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. டிஜிபியை கூட நியமிக்க முடியாமல் அரசு திணறுகிறது. புத்தகம் எடுத்து செல்ல வேண்டிய பள்ளி, கல்லூரி மாணவர்களின் கையில் தற்போது கஞ்சா இருக்கிறது. சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. சொத்து வரி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடப்படும் என திமுக வாக்குறுதி கொடுத்தது. அதை செயல்படுத்தவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய ஒய்வூதியத் திட்டத்தை கொடுப்பதாக கூறினார்கள். அதையும் செய்யவில்லை. இதனால் திமுக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
அடுத்த முறை எடப்பாடி பழனிசாமிதான், முதலமைச்சராக பதவியேற்க போகிறார். பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்து சென்ற பிறகு, அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும். எடப்பாடி பழனிசாமியுடன் எங்கள் தலைவர்கள் வந்து பேசுவார்கள். எங்களை பொறுத்தவரை, பாஜகவில் இருந்து 20 முதல் 30 பேர் சட்டமன்றத்துக்குள் எம்எல்ஏக்களாக நுழைவார்கள். வி.பி. துரைசாமி அமைச்சராவார்” என நயினார் நாகேந்திரன் கூறினார் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இல்லையென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி வரும் நிலையில், பாஜகவை சேர்ந்த வி.பி.துரைசாமி அமைச்சராவார் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



