திமுகவில் இன்று இணைகிறார் ஓபிஎஸ்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்.(பைல் படம்)

ஓ.பன்னீர்செல்வம் தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்து விட்டு திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என இந்த முறை 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள சூழலில் அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேருவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க முடியாது என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்து விட்டார். மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக தொடர்ந்து புறக்கணித்து வருவதால் அவரது ஆதரவுளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். ஜேசிடி பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் தவெகவில் தஞ்சமடைந்தனர். பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சியை தொடங்கி விட்டார். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்த போது இரண்டு முறை ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். அப்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம், உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோர் தங்களின் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் இன்று இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையின் இன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ள திமுக மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதே பகிருங்கள்

One comment

  1. நல்ல முயற்சி.தொடரட்டும். வாழ்த்துகள்.
    ஜனமித்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *