‘இந்த கருமத்துக்குத்தான் தர்மயுத்தமா?’: ஓபிஎஸ்சை கரித்து கொட்டிய அதிமுக!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ்.

இந்த கருமத்துக்காக தான் தர்ம யுத்தம் எல்லாம் செய்தீர்களா என்று ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இன்று(பிப்ரவரி 27) இணைந்தார். அவருடன் அவரது மகனும் அதிமுக முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்தனர்.

கூச்சமே இல்லையா?
இதற்குப் பிறகு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி சர்வாதிகாரியாக நடந்து கொள்கிறார்.. இனி எந்த காலத்திலும் அதிமுக வெல்ல முடியாத சூழலை உருவாக்கியுள்ளார். அவர் அதிமுகவை அழிவுப் பாதைக்கு அழைத்து செல்கிறார் என்று குற்றம் சுமத்தியிருந்தார். இதற்கு. அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள ஐடிவிங் பக்கத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்து பதிவு ஒன்று பகிரப்பட்டுள்ளது.

அதில், “ஓபிஎஸ் கூச்சமே இல்லையா? ரோஸி டீக்கடை நடந்த வந்த உங்களை ஆளாக்கி, அமைச்சராக்கி, முதலமைச்சர் ஆக்கியது இந்த இயக்கம். ஜெயலலிதா வளர்த்த இந்த இயக்கத்தின் படிவங்களில் கையெழுத்து போடும் பெருமையை கொடுத்து அதிமுக தொண்டர்கள் அழகு பார்த்தார்கள். ஆனால், கட்சிக்குள் இருந்தும் உ.பி.யாகவே நீங்கள் இருந்தீர்கள். எம்ஜிஆர் மாளிகையில் கலைஞரின் வசன புத்தகத்தை படித்துக் கொண்டு இருந்தீர்கள்.

அரசியல் அனாதை
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதை போன்று வளர்த்த இயக்கத்தில் வாயில் கதவை எட்டி உதைத்தீர்கள். இந்த பாவமெல்லாம் உங்களை சும்மா விடுமா? அதனால் தான் அரசியல் அனாதை ஆக்கப்பட்டீர்கள். அதிமுக வேட்டியை கூட கட்ட முடியாத நிலையில் அதிமுக தொண்டர்கள் உங்களை தள்ளினார்கள். நீங்கள் பசுத்தோல் போர்த்திக் கொண்டு நடத்திய நாடகம் அனைத்தும் அம்பலப்பட்டு போனது.

இதனால் வேறு வழியே இல்லாமல் முதலாளி வாசலுக்கே போய் சேர்ந்தாச்சோ? இனி உம்மை போன்ற பச்சோந்திக்கு அம்மா எல்லாம் சும்மா தானே. இனிமேல் வெட்கமே இல்லாமல் மானங்கெட்டு திரிவதற்கு வாழ்த்துக்கள். இந்த கருமத்துக்காக தான் தர்ம யுத்தம் எல்லாம் செய்தீர்களா. உங்களை நம்பி ஏமாந்து அந்த சில தொண்டர்களின் பாவம் தலைமுறைக்கு தொடரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *