எங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும்…கிரிஷ் சோடங்கர் சொல்கிறார்!

திமுகவுடன் காங்கிரஸ் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

எங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும் என்று நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் இருக்கிறோம் என்று கிரிஷ் சோடங்கர் கூறினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் பேச்சுவார்த்தை குழுவுடன் காங்கிரஸ் கட்சியின் குழு இன்று (பிப்ரவரி 28) தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், நிவேதித் ஆல்வா, செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழு இப்பேச்சுவார்த்தையை நடத்தியது.

இதன் பின் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக இருந்தது. இரு கட்சிகளும் தொகுதிகள் தொடர்பான பட்டியலை பரிமாறிக் கொண்டோம். எங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும் என்று நாங்கள் மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் இருக்கிறோம்” என்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறுகையில், ” காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் கேட்கப்பட்டது என்பதை ஊடகங்கள் முன்பு சொல்ல முடியாது. நாங்கள் கையெழுத்து போடும்போது உங்களை வைத்துக்கொண்டு, கையொப்பமிட்டு அதை சொல்வோம். காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக ஏற்கெனவே முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுகவுடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது, நம்பிக்கையோடு சென்று கொண்டிருக்கிறது. எந்தவித பிரச்சனையும் இல்லை. நீங்களும் இங்க பிரச்சனை, அங்க பிரச்சனைன்னு என செய்தி வெளியிடுவதை நிறுத்த வேண்டும் . தவெகவுடன் யாரு பேச்சு நடத்தியது? தவெகவுடன் பேச்சு நடத்துவதாக கிரிஷ் சோடங்கர் சொல்லவே இல்லை. நாங்கள் திமுகவுடன் தான் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *