அப்பாடா… திமுக,காங்கிரஸ் தொகுதி பங்கீடு கையெழுத்தானது!

திமுக, காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (மார்ச் 4) கையெழுத்தானது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக, காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று (மார்ச் 4) கையெழுத்தானது.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியில் சிலர் திடீரென ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என வலியுறுத்த ஆரம்பித்தனர். பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர் எம்.பி உள்ளிட்ட பலர் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். இதனால் காங்கிரஸ், திமுக பேச்கவார்த்தை இழுபறியாகவே இருந்தது. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர். விஜய்யின் தவெகவுடன் கூட்டு வைக்க விரும்புவதாக செய்தி பரவியதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால், காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக- காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என்றும், ஊடகங்கள் தான் திரித்து செய்தி வெளியிடுவதாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், சனிக்கிழமையன்று தொகுதி பங்கீட்டு குழுவினருடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் அளித்த பேட்டியில் திமுக கொடுக்க முன்வந்துள்ள 25 இடங்கள் போதாது என்றும், தவெகவைப் புகழ்ந்தும் பேசினார். இதனால், திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடருமா எனும் சந்தேகம் எழுந்தது.

இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் பேரில் கூட்டணி உறுதியாகி விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இந்தச் சூழலில், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு இன்று மீண்டும் காங்கிரஸுக்கு திமுக அழைப்பு விடுத்தது. இதனைத் தொடர்ந்து, டெல்லியில் இருந்து காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை வந்தார். அவருடன் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையும் இருந்தார். இவர்கள் இருவரும் சென்னை விமான நிலையத்திலேயே பலமணி நேரமாக ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது.

இதையடுத்து சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் காங்கிரஸ் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இதையடுத்து காங்கிரஸுக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செல்வப்பெருந்தகை கூறுகையில், “ காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினருக்கு யார் வேட்புமனு தாக்கல் செய்வார் என்பதை அகில இந்திய தலைமை தெரிவிக்கும்” என்றார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *