
நானும், திமுகவும் இருக்கும் வரை தமிழ்நாட்டை பாஜகவால் ஆள முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக மாநில மாநாடு
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் திமுக மாநில மாநாடு இன்று (மார்ச் 9) நடைபெற்றது. ‘ ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசுகையில்,; “இந்த மாநாடு எதற்கு என பலரும் கேட்கிறார்கள். ஒரு கிரிக்கெட் போட்டியில் முதல் ஓவரில் இருந்தே ரன் எடுப்பது அவசியம். அதேசமயம், இறுதி ஓவர்களில் அடித்து ஆடி, இறுதி பந்தில் வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் அடித்து வெற்றி பெறுவது என்பது கிராண்ட் ஃபினிஷிங்காக இருக்கும். 2026-ல் அப்படியான வெற்றியை பெறுவதற்கே இந்த மாநாடு.
என்டிஏ கூட்டணி
மகளிர் உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம், பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து, புதுமைப் பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன் என எந்தத் திட்டத்தையாவது எந்தக் கட்சியாவது நிறுத்த முடியுமா? எவராலும் மாற்ற முடியாத திட்டங்கள்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திட்டங்கள். இந்தத் திட்டங்கள் தமிழ்நாட்டில் இருக்கும்வரை, தமிழ்நாட்டை ஆளுவது இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்தான். அதிமுக கூட்டணி என்றால் மோடியும், அமித்ஷாவும் கோவித்துக்கொள்வார்கள். என்டிஏ கூட்டணி என்றுதான் சொல்ல வேண்டும். கூட்டணிக்கு பெயர் வைக்கக்கூட முடியாத நிலையில்தான் இன்றைய அதிமுக இருக்கிறது. அந்த என்டிஏ நாம் கேட்ட நிதியையும், மாநிலத்திற்கான சிறப்பு திட்டம், மெட்ரோ திட்டங்கள் என எதையும் தரவில்லை.
பாஜகவால் ஆள முடியாது
பாஜக தமிழ்நாட்டிற்கு தந்ததெல்லாம், ஆளுநர் மூலமாக குடைச்சல், மாணவர்கள் உயிருடன் விளையாடும் நீட் தேர்வு, இந்தித் திணிப்பு, மிரட்டி பார்க்க ரெய்டுகள் இதுதான் மோடி சொல்லும் என்டிஏ ஆட்சி. இந்தத் தேர்தல் தமிழ்நாடு டெல்லி என்றேன். இதனை நம் எதிரிகள் விமர்சித்தனர். திமுக என்பது தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல, எப்போதும் மக்களுக்காக களத்தில் நிற்கும் கட்சி. தமிழ்மொழிக்கு எதிராக இருக்கும் கட்சி எது என்பதும், அதனை எதிர்க்கும் தைரியமும் திமுகவுக்கு மட்டுமே இருக்கிறது. அதிமுக முகமூடி அணிந்துவந்தாலும் அதனை கிழித்துவிடுவோம். தன் சுய நலனுக்காக அதிமுகவை அடமானம் வைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. நானும், திமுகவும் இருக்கும் வரை தமிழ்நாட்டை பாஜகவால் ஆள முடியாது” என்றார். இந்த மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்றனர்.



