சட்டமன்றத் தேர்தல் புதிய கருத்து கணிப்பு… திமுக அதிக இடங்களை அள்ளும்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 41.5 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று புதிய கருத்து கணிப்பு முடிவில் தெரிய வந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழில்நுட்பம் சார்ந்த அரசியல் நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் தேர்தல் கணிப்பு நிறுவனமாகிய
கேகே சர்வேஸ் அண்ட் ஸ்ட்ராடஜீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு அங்கமான பாராவீல், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 குறித்த கருத்து கணிப்புகளை மேற்கொண்டது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அளவிலான விரிவான அறிவியல் பூர்வ கருத்துக்கணிப்புகளை மேற்கொண்டுள்ளது. ஒவ்வெரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.

இதில் 70 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முதற்கட்ட முடிவுகளின்படி, திமுக 41.5 சதவீதம், அதிமுக 36.2 சதவீதம், தவெக 13.6 சதவீதம், நாம் தமிழர் கட்சி 7.9 சதவீத வாக்குகளைப் பெறும் என்று தெரிய வந்துள்ளது. நடிகர் விஜய்யின் தவெக தமிழ்நாட்டில் மூன்றாவது சக்தியாக உருவெடுத்துள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. அத்துடன் சென்னை நகரில், பல தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான வாக்காளர்களை கவர்ந்துள்ளது. இங்கு திமுகவிற்கு அடுத்தபடியாக இரண்டாவதுஅரசியல் சக்தியாக தவெக உருவெடுத்து வருகிறது என்று தெரிய வந்துள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் திமுக தொடர்ந்து முதலிடத்தில் நீடித்தாலும், இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் தவெக குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்று முன்னிலையில் உள்ளது.

கேகே சர்வேஸ் அண்ட் ஸ்ட்ராடஜீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஏற்கெனவே 2019 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆந்திரா மாநில சட்டமன்றத் தேர்தல்கள், 2024-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் போன்றவற்றில் மிகத் துல்லியமான கணிப்புகளை வழங்கி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது

இந்த கருத்து கணிப்பு குறித்து, பாராவீல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரண் கொண்டெட்டி கூறுகையில், ” தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் முதன்முறை வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் மற்றும் வெற்றி வாய்ப்பை மாற்றியமைக்கும் தொகுதிகளின் பங்கு குறித்து எங்களது ஆய்வு ஆராய்கிறது. குறிப்பாக, தவெக தலைவர் நடிகர் விஜய் காரணி குறித்து ஒரு சிறப்புப் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதில் ரசிகர்கள் வாக்காளர்களாக மாறுவது, இளைஞர்களைத் திரட்டுவது மற்றும் திமுக, அதிமுக போன்று முக்கியக் கட்சிகளின் வாக்கு வங்கியில் இது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன” என்று தெரிவித்தார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *