
செங்கோட்டையன்
விஜய் துணை முதலமைச்சர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெகவை இணைக்க பல்வேறு முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்காக தவெக தலைவர் விஜய்யிடம் பல்வேறு தரப்பினர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆந்திராவின் துணை முதலமைச்சர் பவன் கல்யான் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. தமிழக துணை முதலமைச்சர் பதவியும், 40 தொகுதிகளும் தருவதாக விஜய்யிடம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் தவெக மாநில நிர்வாகி கே.ஏ.செங்கோட்டையன் இன்று(மார்ச் 16) செய்தியாளர்களிடம் கூறுகையில், “டெல்லியில் நடந்த சிபிஐ விசாரணையில் அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு தலைவர் விஜய் உரிய பதில் அளித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான், அனைத்தையும் விட்டு மக்கள் பணிக்காக விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்.
தற்போது அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அதிக அளவில் திரண்டு வருகிறார்கள். இது தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புவதையே காட்டுகிறது. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு நிலைமை சரியாக இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் அச்சத்துடன் வாழும் சூழலே நிலவுகிறது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற மன நிலையில் மக்கள் உள்ளனர். அந்த மாற்றத்தை கொண்டு வரக்கூடிய திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் வகையில் சிறந்த வேட்பாளர்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் உள்ளனர். தவெக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து இதுவரை எந்த விதமான கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை” என்றார்.
அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணைந்தால் விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தகவல் வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு. ” முதலமைச்சராகவே வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அனைத்தையும் விட்டு விஜய் அரசியலுக்கு வந்து உள்ளார். துணை முதலமைச்சர் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று கே.ஏ.செங்கோட்டையன் பதிலளித்தார்.



