பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது… பறக்கும் படைக்கு அர்ச்சனா பட்நாயக் எச்சரிக்கை

அர்ச்சனா பட்நாயக்

பணப்பட்டுவாடா குறித்த சோதனைகளின் போது பொதுமக்களை தொந்தரவு செய்யக் கூடாது என என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6- ம் தேதி நிறைவு பெறுகிறது. இருந்தாலும் மார்ச் 31, ஏப்ரல் 3, 4, 5 பொது விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

வேட்புமனு பரிசீலனை ஏப்ரல் 7-ம் தேதியும், வேட்பு மனுக்களை ஏப்ரல் 9-ம் தேதியும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அதனையடுத்து வாக்குப்பதிவு ஏப்ரல் 23- ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4- ம் தேதியும் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் மே 6-ம் தேதியுடன் நிறைவடையும். மார்ச் 15 நிலவரப்படி, தமிழ்நாட்டில் 5.69 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஒட்டு மொத்தமாக 2,106 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து வசதிகளையும் மேற்கொள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிக்கு வெளியே வாக்காளர்கள் கைபேசியை பாதுகாக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். ஆவணங்கள் இருந்தால் சோதனைக்குப் பிறகு அந்த பணம் அப்போதே திருப்பி ஒப்படைக்கப்படும். இந்த சோதனைகளின் போது பொதுமக்களை தொந்தரவு செய்யக் கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும்..

வரும் 26-ம் தேதி வரை புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். புதிதாக வாக்காளர் அடையாள அட்டை கேட்டு ஏற்கெனவே விண்ணப்பித்தவர்களுக்கு ஆவணங்கள் சரியாக இருந்தால் விரைவில் வாக்காளர் அட்டை கிடைக்கும். அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்திற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மேற்கொள்ளலாம். 5 ஆயிரம் பேருக்கு மேல் கூடினால் அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்பதை பார்ப்போம்” என்று அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *