
திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, பிரச்சாரம் ஆகியவற்றில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக கூட்டணியில் இன்னும் சில கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது அக்கட்சிகளுக்கு வருத்தத்தை அளித்துள்ளது. அவர்கள் கேட்ட தொகுதிகளை விட ஏற்கெனவே கொடுத்த தொகுதிகளை விட குறைத்து கொடுக்க திமுக முடிவு எடுத்த அந்த முடிவை அக்கட்சிகள் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக திமுக எத்தனை தொகுதிகளில் களமிறங்கப்போகிறது என்ற கணக்கு இதுவரை வெளியாகவில்லை.
இந்த நிலையில், திமுகவில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு இன்று (மார்ச் 17) முதல் நேர்காணல் நடத்தப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,372 பேர் விருப்பமனு அளித்திருந்தனர். அவர்களுக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல் நேர்காணல் நடத்தப்படுகிறது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இந்த நேர்காணலை நடத்த உள்ளார். இன்று தொடங்கும் நேர்காணல், மார்ச் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.

புதுச்சேரி, காரைக்கால் வேட்பாளர்களுக்கு இன்று காலை 9 மணிக்கு நேர்காணல் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை (மார்ச் 18) காலை 9 மணிக்கு தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி தென்காசி மாவட்டங்களுக்கும், நாளை மதியம் மதுரை, தேனி, விருதநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது..
இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (மார்ச் 19) காலை கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கும், அன்றைய தினம் மாலை திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் நேர்காணல் நடைபெறுகிறது. மார்ச் 20-ம் தேதி காலை ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும், அன்றைய தினம் மாலை தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது. மார்ச் 21-ம் தேதி காலை 9 மணிக்கு திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கும், மாலை 4 மணிக்கு புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது. மார்ச் 22-ம் தேதி காலை கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும், மாலையில் திருவள்ளூர், சென்னை, மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறும் திமுக அறிவித்துள்ளது..



