
விஜய்
ஆட்சியில் பங்கு ஆசைகாட்டினார்கள். ஆனால், தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடும் என ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெகவை இணைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக சிபிஐ மூலம் தவெகவிற்கு அழுத்தம் தரப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. அத்துடன் துணை முதலமைச்சர் பதவி வழங்கவும் தவெகவிடம் பேசப்பட்டதாக தகவல் பரவியது. இந்த நிலையில், அது உண்மை தான் என தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஒப்புதல் விளக்கமளித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஆதவ் அர்ஜுனா, ”90 தொகுதிகள் தருவதாக தமிழக வெற்றிக் கழகத்திடம் பேரம் பேசினார்கள். ஆனால், தவெக அடிபணியவில்லை. 234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டியிடும். ஆட்சியில் பங்கு என்பது எல்லாம் இல்லை. எனக்கு ஆஃபர் தேவையில்லை, தமிழக மக்களின் நலனும், நம்பிக்கையுமே முக்கியம் என விஜய் கூறினார். முதல்வர் பதவிக்காக டெல்லிக்கு அடிபணிய மாட்டோம். மதச்சார்பற்ற அரசை அமைக்கும் வலிமையை மக்கள் நிச்சயம் தருவார்கள். படத்தை வெளியிட மத்திய அமைச்சரை சந்தித்துவிட்டு வரும் பழக்கம் எங்களுக்கு இல்லை. தமிழகத்தில் பராசக்தி வெளியிடப்பட்ட நிலையில், ஜனநாயகன் நிறுத்தப்பட்டதற்கு அரசியல் சூழ்ச்சியே காரணம். இந்த அரசியலை அச்சமின்றி விஜய் எதிர்கொள்வார்” என்று கூறினார்.



