
அஇபுதமமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா
அஇபுதமமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு இன்று முதல் விருப்பமனு வினியோகிக்கப்படும் என்று சசிகலா அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், பிப்ரவரி 24-ம் தேதி புதிய கட்சியை தொடங்கியதாக வி.கே.சசிகலா அறிவித்தார். அத்துடன் கட்சியின் கொடியை அறிவித்து, கட்சியின் பெயரை விரைவில் வெளியிடுவதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து மார்ச் 13-ம் தேதி கட்சியின் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் பெயரை வி.கே.சசிகலா அறிவித்தார். கட்சி சின்னமாக தென்னந்தோப்பையும் அறிவித்தார். இந்த நிலையில், அஇபுதமமுக சார்பில் இன்று (மார்ச் 18) முதல்
விருப்பமனு வினியோகம் தொடங்கப்படும் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவைத் தேர்தலில், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட அனுமதி கோரும் கழக உடன்பிறப்புகளிடம் இருந்து இன்று காலை 11 மணி முதல் விண்ணப்பங்கள் பெறப்படும். மார்ச் 22-ம் தேதி இரவு 7 மணி வரை விண்ணப்பப் படிவங்கள் பூர்த்தி செய்து வழங்கலாம் என்று சசிகலா அறிவித்துள்ளார்.
மற்ற அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். விண்ணப்பப் படிவங்களை போயஸ் கார்டன், ஜெயலலிதா இல்லத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார். மேலும் தமிழ்நாட்டிற்கான பொதுத்தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 5,000, தனித்தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம் – ரூ. 3,000 என்றும், புதுச்சேரிக்கு பொதுத்தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 3,000
தனித்தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,000 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



