இரட்டை இலக்க தொகுதிகளைக் கேட்கும் விசிக… முதல்வரை சந்தித்து வலியுறுத்திய திருமா!

தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கத் தொகுதிகளை திமுக கூட்டணியில் விசிக கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடுசட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளை முடிக்க திமுக தீவிரம் காட்டி வருகிறது. திமுக கூட்டணியில் புதிதாக கட்சிகள் இணைந்ததால், ஏற்கெனவே உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால், 5 ஆண்டுகளாக திட்டித் தீர்த்து விட்டு தற்போது கூட்டணியில் சேர்ந்துள்ள கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகள் கொடுப்பதை போல, ஏற்கெனவே கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு மரியாதையான எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று திமுகவிடம் அந்தக் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதன் காரணமாக மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசியுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் 4 தொகுதிகளில் வென்றனர். நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மாநில கட்சி அங்கீகாரம் பெற்ற விசிக, கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியின் செயல்பாடுகளுக்கு உற்ற துணையாக இருந்துள்ளது.

இந்த தேர்தலில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் போட்டியிட விசிக விரும்புகிறது. அதாவது 12 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. ஆனால், அதில் பாதியாக குறைத்து வழங்க விரும்புவதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியையும் சேர்த்து இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், திருமாவளவன் வலியுறுத்தியதாக தெரிகிறது. தமிழ்நாட்டில் 7 தொகுதிகள் வரை விசிகவிற்கு ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. எனவே, இந்த டீல் முடிந்தால் திமுக- விசிக இடையே தொகுதி பங்கீடு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *