
2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் கையெழுத்தானது.
திமுக கூட்டணியில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 10 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் கடந்த 2021-ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் திருத்துறைப்பூண்டி, வால்பாறை ஆகிய தொகுதிகளில் வென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பவானிசாகர், சிவகாசி, ஸ்ரீவைகுண்டம், பல்லடம் ஆகிய தொகுதிகளில் தோல்வியடைந்தது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று திமுகவிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.
ஆனால், கூட்டணியில் புதிதாக கட்சிகள் இணைந்துள்ளதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்ட தொகுதிகளை திமுகவால் ஒதுக்க முடியவில்லை. இதனால் பேச்சுவார்த்தை இழுபறியானது. இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தமானது. இதை ஏற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் கையெழுத்திட்டிருந்தார்.
இந்த நிலையில், திடீரென திமுகவிடம் தளி, திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டினம், வால்பாறை, தொண்டாமுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், பழநி, சிவகங்கை, பவானிசாகர், திருப்பூர் வடக்கு ஆகிய 10 தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடுத்துள்ளது. இந்த பத்து தொகுதிகளில் இருந்து 5 தொகுதிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக இறுதி செய்யும் என்று தெரிகிறது.



