கூட்டணி இழுபறியில் தவிக்கும் அதிமுக… பியூஷ் கோயல் சென்னை வருகை ஒத்திவைப்பு

பியூஷ் கோயல்

தொகுதி பங்கீடு குறித்த இழுபறி காரணமாக தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயலின் சென்னை பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்குவங்கம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தமிழக சட்டமன்றக் களம் தீவிரம் அடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடையும் நிலையில் உள்ளது. ஆனால், அதிமுக கூட்டணியில் எந்தந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை ஒதுக்க முடியாமல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் டெல்லிக்குச் சென்ற அவர், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை செய்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு டெல்லியில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த போது, தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், இனி எந்த கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை என்றும் கூறினார். இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று இரவு சந்திப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், அவருக்கு உரிய நேரம் ஒதுக்கப்படவில்லை. இதனால் இன்று (மார்ச் 21) அவர் அமித்ஷாவை சந்திக்க உள்ளார்.

இந்த நிலையில், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னையில் இன்று ஆலோசனை நடத்த இருந்தார். ஆனால், அவரது வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீடு இழுபறியாகியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி பேச்சுவார்த்தை நாளை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *