
திருமாவளவன்
சட்டமன்றத் தேர்தல் குறைவான தொகுதிகளையே பெற்று போட்டியிடும் நிலை உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் திமுக தீவிரமாக உள்ளது. அந்த கட்சியில் தற்போது மார்க்சிஸ்ட், விசிக கட்சிகளுக்கு இன்னும் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது. கடந்த முறையை விட கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விசிகவிற்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 4 தொகுதிகளில் விசிக வெற்றி பெற்றது. எனவே, இந்த முறை கூடுதல் தொகுதிகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் இன்று (மார்ச் 21) முதல் மார்ச் 24-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகின்றன. இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோவை திருமாவளவன் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ” மிகக் குறைவான எண்ணிக்கையிலான தொகுதிகளையே பெற்று கூட்டணியில் போட்டியிடுகிறோம். இருந்தாலும், 234 தொகுதியிலிருந்தும் விருப்பம் மனுக்களைப் பெறுகிறோம்.
இது, மெகா கூட்டணி. 23 கட்சிகள் இணைந்துள்ள கூட்டணி. எனவே, குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிடக் கூடிய நிலையே உள்ளது. இருந்தாலும் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் எவ்வளவு பேர் போட்டியிட விரும்புகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள விருப்ப மனு பெறப்படுகிறது. இது ஒரு ஜனநாயக நடைமுறையாகவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடைப்பிடித்து வருகிறது. விருப்பமனுக்கள் பெறப்பட்டாலும் அதன் பிறகு நேர்காணல் நடத்தப்படாது. கட்சித் தலைவர் என்ற முறையில் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பேன். ஆனாலும், தமிழ்நாடு முழுவதும் விருப்ப மனுக்களை பெறுவதற்கு காரணம் நீங்கள் விருப்ப மனு அளிக்கும்போது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். எனவே, அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



