மலையாளக் கரையோரம் தமிழ் பாடிய குருவி

மதுரை கோ.புதூர் கனரா வங்கி அருகே ஒரு பழைய கட்டிடம் உள்ளது. ஒரே காலத்தில் நிறைய தையல் கலைஞர்களுக்கு வாழ்வளித்த இடம் அது. கீழ்த்தளத்தில் மாணிக்கம் என்பவர் நியூ மவுண்டன் என்ற பெயரில் சலூன் கடை நடத்தி வந்தார். மேல் தளத்தில் ராஜேந்திரன் என்பவரின் டெய்லர் கடை இயங்கி வந்தது. இப்போதும் புதூர் மார்க்கெட் அருகே அந்த பழைய பில்டிங் உள்ளது.
லெனின் மாடல்
மாணிக்கத்திடம் தான் அப்பா முடி வெட்டுவார். என்னை அதிகாலையில் அங்கு அழைத்துச் சென்று ,”இவனுக்கு லெனின் மாதிரி முடிவெட்டி விடுங்கள்” என்பார். ரஷ்யாவின் புரட்சி தலைவர் லெனின் குறித்து மாணிக்கத்திற்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியாது. ஆனால், முடிவெட்டும் மிஷின் கொண்டு மொட்டையடிப்பது போல முடியை வெட்டி விடுவார். தாம்பூலம் மணக்கும் சொற்களுக்குச் சொந்தக்காரரான மாணிக்கம், நேரம் ஆக ஆக ஆல்கஹால் மணக்க மாறி விடுவார்.
ஆனால், நல்ல இசைப்ரியர். அவர் கடையில் இருக்கும் ரேடியாவில் பாட்டை ஒலிக்க விட்டு பாட ஆரம்பித்து விடுவார்.
நினைக்க நினைக்க நெஞ்சம் உருகுமே … முருகனென்றால்
நிகரில்லாத பக்தி பெருகுமே…
வினைத்துயரம் யாவும் விலகுமே
வேலனென்றால்
விளங்கும் செல்வம் வீட்டில் நிறையுமே…
இசை பேரறிஞர் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் பாடல் ஒலிக்கும் போது மாணிக்கமும் சேர்ந்து பாடுவார். வீணையின் நாதமும், புல்லாங்குழல் கீதமும் பாடல் முழுவதும் நம்மை மெய்மறக்கச் செய்யும். இதில் மே என்பதை சீர்காழி உச்சரிக்கும் போது மேய்ப்பன் பின் செல்லும் ஆடுகளாகி விடுவோம்.

சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் புகழேந்தி
இந்த பாடலுக்கு இசை மீட்டியவர் திரை இசைத்திலம் கே.வி.மகாதேவனின் உதவியாளர் புகழேந்தி. தமிழ், தெலுங்கு. மலையாளம் உள்பட பல்வேறு மொழிப்படங்களுக்கு இசை மீட்டியவர். கே.வி.மகாதேவன் இசையமைத்த 600 படங்களுக்கு உதவியாளராக பணியாற்றியவர். 1955-ம் ஆண்டில் இருந்து 1995-ம் ஆண்டு வரை கே.வி.மகாதேவனுடன் இசை உதவியாளராக பணியாற்றி சாதனைப் படைத்தவர்.

இசையமைப்பாளர் புகழேந்தி
திரைப்படங்கள் மட்டுமின்றி நிறைய பக்தி இசைப்பாடல்களுக்கு இசை தந்தவர் புகழேந்தி. இவர் இசையமைத்த நிறைய பாடல்களை எழுதியவர் கவிஞர் எம்.பி.சிவம். காலம் கொண்டாட மறந்த கலைஞர் இவர். கேரள மாநிலம், பாலக்காடு அருகில் உள்ள கிழக்கு யாக்கரை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.பி.சிவம். இவரின் முழுப்பெயர் மதிலகத்து வீடு பரமசிவம். தாய்மொழி இவருக்கு மலையாளம் என்றாலும் தமிழில் மிகுந்த புலமை பெற்றவர். இசைஞானம் கொண்ட எம்.பி.சிவம்,யதார்த்தம் பொன்னுச்சாமி பிள்ளையின் மதுரை பால கான சபாவில் ஆர்மோனியக்கலைஞராக முதல் முதலில் பணியாற்றியவர்.
எம்.பி.சிவம்
பின்பு நாடக ஆசிரியராக மாறி பல கலைஞர்களுக்கும் நடிப்பைச் சொல்லிக் கொடுத்தவர். .அத்துடன் பாடல்களை இயற்றும் திறமை கொண்ட எம்.பி.சிவம், குமாரி, மதன மோகினி, நல்லகாலம், நல்ல வீடு, மகதலநாட்டு மேரி உள்பட பல படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். அத்துடன் சில படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். குறிப்பாக இவர் எழுதிய பல திரையிசைப் பாடல்களை திரையிசை திலக்ம் கே.வி.மகாதேவன் பாடியுள்ளார் என்பதுகுறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்.

எஸ்.ஜானகி
எஸ்.ஜானகியின் முதல் பாடல்
சலூன் கடை மாணிக்கம் ரசித்து பாடும், நினைக்க நினைக்க நெஞ்சம் உருகுமே பாடலை எழுதியவரும் எம்.பி.சிவம் தான். இசையமைப்பாளர் புகழேந்தியின் மைத்துனர் இவருக்குச் சகோதரர். எஸ்.ஜானகி முதல் முதலாக தமிழ் சினிமாவில் பாடிய கண்ணுக்கு நேரே மின்னிடும் தாரை பாடலை எழுதியவரும் இவர் தான். நாடகத்துறையில் வாத்தியார் என்று அழைக்கப்பட்ட எம்.பி.சிவம், தமிழ் திரைத்துறையில் பெரியதாக கோலோச்ச முடியவில்லை. திரைப்படத்துறையில் வாய்ப்பு குறைந்ததையடுத்து கேரளாவிற்கு சென்று விட்டார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து பக்தி பாடல்களை எழுத வைத்து இசையமைத்தவர் புகழேந்தி தான். இதன் பின் முழுநேர பக்தி இசைக்கவிஞராக எம்.பி.சிவம் ஜொலித்தார்.
முருகன் பாமாலை
1989-ம் ஆண்டு தனது குருநாதர் கே.வி.மகாதேவனின் ஆர்க்கெஸ்ட்ராவை வைத்து முருகன் பாமாலை என்ற இசை ஆல்பத்திற்கு புகழேந்தி இசையமைத்தார். பி.சுசீலா பாடிய அத்தனை பாடல்களையும் எழுதியவர் எம்.பி.சிவம் தான். சித்தியெல்லாம் தரும் திருமுருகா, வேதத்திற்கெல்லாம் அதிபதி நான், மலர் செண்டாக மலைகளைப் பந்தாடி, போர்க்கோலம் கொண்ட முருகன் புறப்பட்டான், மணக்கோலம் திருமணக்கோலம், பேரழகின் பிறப்பிடமே, எனக்கும் உனக்கும் இருக்குதய்யா உறவு, முத்தமிழ் போற்றும் முருகனும் நீ, அம்மையப்பா எங்கள் அன்பு வணக்கம் உள்ளிட்ட முருகன் புகழைப்போற்றும் அற்புதமான பாடல்களை எம்.பி.சிவம் எழுதியுள்ளார். திரைப்படங்களில் அதிக முருகன் பாடல்களைப் பாடிய பி.சுசீலா, திரைப்படம் சாராத பக்தியிசை பாடல்களிலும் அதிக முருகன் பாடல்களைப் பாடியுள்ளார்.

பி.சுசீலாவின் முருகன் பாமாலை
சீர்காழியின் ஆலாபனை
இசைமாமணி சீர்காழி கோவிந்தராஜன் பாடுகிறார் என்றால், கோயில் மணி என சொற்கள் சுத்தமாக ஒலிக்கும். அவரது குரலில் பக்தி பாடல்களைக் கேட்பதென்பது பேரானந்தம் தான்.
வானச் சுடரொளி யில் உனது வண்ண வடிவம் கண்டேன். முருகா!
ஏனைய துன்பமெல்லாம் உடனே எங்கோ மறையக் கண்டேன். முருகா!
கோல கதிரில் எல்லாம் திரண்டு ஓடிய வேல் கண்டேன்.
நீல முகில் தனிலே அழகாய் நின்றாடும் மயில் கண்டேன். முருகா!
பானகத்தின் அலையில் உனது பாய்ந்திடும் அன்பு கண்டேன். முருகா!
கானக பசுமையிலே உனது கல்யாண அருள் கண்டேன். முருகா!
தேனமுதத் தமிழில் உனது திருநாமச் சுவை கண்டேன்.
கான இனிமையிலே உனது ஞானப் பொருள் கண்டேன். முருகா!
தைப்பூசத் திருநாளில் முருகனின் பெருமைகளைச் சொல்லும் வகையில் எழுதப்பட்ட இந்த பாடல் புகழேந்தி இசையில் எம்.பி.சிவம் எழுதியது தான். இந்த பாடலில் நீல முகில் தனில் என்ற வரிகளுக்குப் பின் சீர்காழியின் ஆலாபனை மயக்க வைக்கும். இசை என்பது ஒரு மேஜிக். பாடும் கலைஞனை மறைக்க வைக்கும். கேட்போரை கிறங்க வைக்கும். ஹரிஹர புத்திரனான ஐயப்பனை போற்றும் எத்தனையோ பாடல்கள் வந்துள்ளன. ஆனால், எம்.பி.சிவம் எழுதிய இஷ்டமான தெய்வமே பாடலை , சீர்காழி கோவிந்தராஜன் குரலில் கேட்டுப் பாருங்கள்.
ஐயனை அன்னையாக்கி
அப்பனை தந்தையாக்கி
ஐயப்பன் என்ற தூய பெயர் பெற்றவா…
என ஐயப்பனின் வரலாறை இரண்டே வரிகளில் எழுதியிருப்பார் எம்.பி.சிவம்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் எல்.ஆர்-ஈஸ்வரி
எல்.ஆர்.ஈஸ்வரி
பக்தி பாடல் என்றால், சொற்களைக் கொட்டி கதம்ப மாலை கட்ட முடியாது. பாடப்படும் ஆண்டவனின் வரலாறு, கோயிலின் வரலாறு தெரிய வேண்டும். அப்படி தான் எழுதிய ஒவ்வொரு பாடலையும் வரலாற்றின் வழியே பதிவு செய்து வைத்துள்ளார் எம்.பி.சிவம். பக்தி பாடல்கள் என்றவுடன் எல்.ஆர்.ஈஸ்வரி இல்லாமலா என்று அனைவரும் கேட்போம். அவரின் குரலில் ஒலித்த பக்திப் பாடல்களுக்கு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவர் பாடிய பல பாடல்களை எம்.பி.சிவம் எழுதியுள்ளார். அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய பாடல்,
கருணை வடிவானவளே கரம் குவித்தோம் அம்மா
கவலை யெல்லாம் தீர்த்து ஆளும் கருமாரி அம்மா
அருள் பொழியும் ஆயிரம் கண்ணுடைய தாயே – உந்தன்
அடிமைகளை காத்தருள்வாய் அனுதினமும் நீயே …
இந்த பாடலுக்கு இசை மீட்டியவர்கள் சோமு- கஜா சகோதரர்கள். இந்த பாடலில் உள்ள சத்தக்கட்டு பாடலின் வடிவத்தை மட்டுமல்ல இசைக்கும் பேருதவி புரிந்தது என்று சொல்லலாம்.
புரிந்தும் புரியாது செய்த
பெரும் பிழைகள் எல்லாம்
பொறுத் தருள வேண்டும் உந்தன்
பொன்னடியை வணங்குகிறேன்
மகிமை பல செய்து வரும்மகா சக்தி அன்னை – இந்த
மெய் தலத்தில் அவதரித்தாள் என்ற வார்த்தை உண்மை…
என எல்.ஆர்.ஈஸ்வரி பாடும் இந்த பாடலில், ஆயிரம் கண்கள் உடைய தாயே, எங்கள் கவலைகளை நீக்கி காப்பாய் என்று கருமாரியம்மனை வேண்டிப் பாடும் பாடலாகும். வெள்ளிக்கிழமை என்றால் தவறால் ஒலிக்கும் இந்த பாடல் 35 ஆண்டுகளுக்கு முன் எம்.பி.சிவத்தால் எழுதப்பட்டது.

டி.எம்.சௌந்தரராஜன்
மதுரையின் மாமணி
தமிழில் குந்தகம் என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. இந்த சொல்லுக்கு இடையூறு, தீங்கு, அல்லது பொது அமைதிக்கு ஏற்படும் பங்கம் என்று பல பொருள் கொள்ளலாம். ஆனால், ஒரு பக்தி பாடலில் இந்த வரியை எழுதியவர் எம்.பி.சிவம். பத்மஸ்ரீ டி.எம்.சௌந்தரராஜன் தமிழ் திரையுலகை 40 ஆண்டுகளாக கட்டிப்போட்ட குரல். மதுரையின் பெருமைகளில் ஒன்றான டிஎம்எஸ் அழைக்கப்படும் டி.எம்.சௌந்தரராஜன், மிகச்சிறந்த இசைஞானம் கொண்டவர். அவர் பல பக்திப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். குறிப்பாக, முருகனின் புகழைப்போற்றி அவர் இசையமைத்த பாடல்கள் பெரும் புகழ் பெற்றவை.. அப்படியொரு பாடலில், குந்தகம் என்ற சொல்லை கவிஞர் எம்.பி.சிவம் பயன்படுத்தியிருப்பார்.
கந்தன் திருநீறு அணிந்தால் கண்டபிணி ஓடிவிடும்
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடிவரும்…
சுந்தரவேல் அபிஷேக சுத்தத் திருநீறு அணிந்தால்
வந்தமர்ந்த மூத்தவளும் வழிபார்த்து போய்விடுவாள்
அந்தநேரம் பார்த்திருந்த அன்னை செல்வம் ஓடிவந்து
சிந்தையை குளிரவைக்க சொந்தம் கொண்டாடிடுவாள்…
என்ற இந்த பாடலைக் கேட்காதவர்கள் இருக்கிறார்களா? திருநீறு குறித்து எழுதப்பட்ட இந்த பாடலில், மனமிகுந்த சாம்பலில் மகிமையிருக்குதடா என்று எழுதியிருப்பார் எம்.பி.சிவம். இந்த பாடலை பாடியதுடன் அழகாக இசையமைத்திருப்பார் டி.எம்.சௌந்தரராஜன். முருகன் புகழ்பாடி டிஎம்எஸ் பாடிய
முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு
முற்றிய வினை தீருமே
உடல் பற்றிய பிணி ஆறுமே
வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று
இனிதுற மெத்த இன்பம் சேருமே
அப்பன் முருகனை கூப்பிட்டு…
பக்தி கமழும் இந்த சொற்கோலத்தை வரைந்தவர் எம்.பி.சிவம் தான். டி.எம்.சௌந்தரராஜன் இசையில் அவரது குரலில் ஒலிக்கும் இந்த பாடல் கந்த சஷ்டி திருவிழாக்களை அழகுபடுத்துகிறது. டி.எம்.சௌந்தரராஜன் பாடிய பக்தி பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுவென்பேன்.
தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும்
தீஞ்சுவை யாகவில்லையே … முருகய்யா …
தீஞ்சுவை யாகவில்லையே ..
எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல்
இன்பம் ஏதும் இல்லையே … குமரய்யா …
இன்பம் ஏதும் இல்லையே…
ஒரு பக்தி பாடலில் இப்படி சந்தக்கட்டுகளை வைத்து பாடலை பிரமாதப்படுத்தியிருப்பார் எம்.பி.சிவம். இன்று வரை நாம் கேட்கும் பல பக்தி பாடல்களை எழுதியவர் எம்.பி.சிவம் என்பது பலருக்குத் தெரியாது. கிருஷ்ண ஜெயந்தியன்று எல்லா கிருஷ்ணன் கோயில்களிலும் டி.எம்.சௌந்தரராஜன் குரலில் மாயாவதாரா ஸ்ரீ கண்ணா என்று ஒலிக்கும். நாராயணனின் மாயாவதாரமான கிருஷ்ணரின் லீலைகளைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்ட அற்புதமான பாடலை எழுதியவர் எம்.பி.சிவம் தான்.

ஜெய விஜயா இசையில் எம்.பி.சிவன் எழுதி கே.ஜே,யேசுதாஸ் பாடிய மலையாள பக்தி பாடல் ஒலிவட்டு.
தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் கே.ஜே.யேசுதாஸ், பி.லீலா உள்ளிட்ட பலர் பாடிய ஏராளமான பக்திப் பாடல்களை இவர் எழுதியுள்ளார். 1966-ம் ஆண்டு பிரபல இசையமைப்பாளர் டி.பி.ராமச்சந்திரன் இசையில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய . அன்னையே வேளாங்கண்ணியே அன்பருள் புரியும் நாயகியே, அம்மா அம்மா வேளாங்கண்ணியே ஆகிய கிறிஸ்தவ பாடல்களையும் எம்.பி.சிவம் எழுதியுள்ளார் தாய்மொழி மலையாளம் என்றாலும், தமிழில் இத்தனை ரசனை கொண்ட பக்திப்பாடல்களை எழுதிய எம்.பி.சிவத்தின் பெயரை இனியாவது மறக்காமல் இருப்போமா?
-ப.கவிதா குமார் (நினைவுகள் சுழலும்)
1)https://maduraiseithi.in/wp-admin/post.php?post=2002&action=edit




மிகச் சிறப்பான கட்டுரை. தொடரட்டும் பக்தி இசை.