
பியூஸ் கோயலுடன், எடப்பாடி பழனிசாமி.
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுகவிற்கு தொகுதிகளை ஒதுக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதேபோல அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனும் அமித்ஷாவை சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியுடன் இன்று (மார்ச் 23) தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன்படி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், அன்புமணி தலைமையிலான பாமகவுக்கு 18 தொகுதிகளும், அமமுகவுக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இன்றிரவுக்குள் தொகுதிப் பங்கீடு நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார். அமமுகவிற்கு ஒதுக்கப்பட்ட 11 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிடும். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க நாங்கள் உழைப்போம் என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.



