
பேருந்தில் பற்றிய தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.
ஆந்திராவில் தனியார் பேருந்து மீது டிப்பர் லாரி மோதி தீப்பிடித்ததில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம் மார்கபுரம் மாவட்டம், ராயபுரம் அருகே இன்று காலை தனியார் பேருந்தும், டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் தனியார் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. அதிகாலை நேரம் என்பதால் பல பயணிகள் தூக்கத்தில் இருந்ததால் உடனடியாக வெளியே வர முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், போலீஸார் விரைந்து வந்து தீயை அணைத்து மீட்பு பணியை மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் 14 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் உயிர் தப்பி உள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் பேருந்து முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தனியார் பேருந்து, ஹைதராபாத்தில் இருந்து பமுரு பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அதேபோல் சிமாகுர்தியில் இருந்து வந்த லாரியும், அந்த பேருந்தும் திடீரென்று நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் 12 பேர் எந்த காயமுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து ஆந்திரா முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு அதிர்1ச்சியும் வேதனையும் தெரிவித்தார். விபத்தில் பல பயணிகள் உயிருடன் கருகியதாக வந்த செய்திகள் குறித்து அவர் தனது ஆழ்ந்த துயரத்தைப் பதிவு செய்தார். மேலும், முதலமைச்சர் அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசி, காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட தற்போதைய நிலவரங்களை ஆய்வு செய்தார். விபத்துக்கான காரணங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



