மகளிர் அணி நிர்வாகி புகார்…பூந்தமல்லி தவெக வேட்பாளர் மீது பாலியல் வழக்கு

தவெக தலைவர் விஜய்யுடன் பூந்தமல்லி தொகுதி தவெக வேட்பாளர் பிரகாசம் மற்றும் புகார் அளித்த சங்கீதா.

மகளிர் அணி நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் பூந்தமல்லி தொகுதி தவெக வேட்பாளர் பிரகாசம் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகியாக இருப்பவர் சங்கீதா(43). இவர் பூந்தமல்லி தொகுதி தவெக வேட்பாளர் பிரகாசம்(எ) குட்டி மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். கடந்த ஜூன் மாதம் திருவள்ளூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் அருகில் இருந்த தெற்கு மாவட்ட செயலாளரும், தற்போதைய பூந்தமல்லி சட்டமன்ற (தனி) தொகுதி தவெக வேட்பாளருமான பிரகாசம் (எ) குட்டி என்பவர்பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சங்கீதா புகார் தெரிவித்திருந்தார்.

தனது உடலின் மீது 4 முதல் 5 முறை தவறான இடத்தில் கை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அத்துடன் தனிமையில் இருக்கலாம் என வற்புறுத்தி அழைத்துள்ளார். இதுகுறித்து கேட்ட தனது கணவர் மணிகண்டனுக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் புகார் கூறியிருந்தார். கட்சி தலைமையில் புகார் கூறி நடவடிக்கை எடுக்காததால் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகத்தில் சங்கீதா புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில், பூந்தமல்லி தொகுதி தவெக வேட்பாளர் பிரகாசம் மீது திருவள்ளூர் மாவட்ட போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் பாலியல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால், கட்சியில் பதவி கிடைக்காத விரக்தியில் எனது கணவர் மீது பொய்ப் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று பிரகாசத்தின் மனைவி திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *