
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை மருது பேரவை நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மருது பேரவை ஆதரவு அளித்துள்ளது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மருது பேரவை நிறுவனர் ம.சமயசெல்வம் மற்றும் மருத்துவர் ச.கோபாலன், ச.தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மருது பேரவை களப்பணியாற்றும் என்று தெரிவித்த நிர்வாகிகள், கோரிக்கை மனுவையும் அளித்தனர்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மருது பேரவை நிறுவனர் ம.சமயசெல்வம் பூங்கொத்து அளித்தார்.
அந்த மனுவில்,” சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் 225 ஆண்டுகளுக்கு முன்பே தங்களுடைய ஆட்சி காலத்தில் சமநீதியும், சமத்துவமும், சகோதரத்துவமும் நிலைநாட்டியவர்கள். சகல மதத்தினரையும் சமமாக பாவித்து அன்பு செலுத்தியவர்கள். அது போல இன்றைய திராவிட மாடல் ஆட்சியும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க செய்துள்ளது. எனவே, திராவிட மாடல் ஆட்சி வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்களை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்று வாழ்த்தி மகிழ்கிறோம்.
மேலும் தமிழக பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வரலாறு பாடங்களில் தென் தமிழகத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்களையும், சுதந்திரப் போராளிகள் என மாமன்றர் மருதுபாண்டியர்களின் வரலாற்றைப் பாடப்புத்தகங்களில் சேர்க்க வேண்டும். அகமுடையார் பிரிவைச் சேர்ந்த அனைவரையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கிட வேண்டுகிஅறாம். தமிழகத்தில் உள்ள மக்களையும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து தமிழகத்தில் உள்ள மக்களில் யார் 97 சதவீதம் பேர், யார் 3 சதவீதம் பேர் என்ற பாகுபாட்டை தமிழகத்தின் நிலையைத் தெளிவுபடுத்த வேண்டுகிறோம்.
நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் சமூகநீதியை காக்கும் திராவிட மாடல் அரசுக்கு ஆதரவளித்து அதன் தோழமைக்கட்சிகளுக்கும் அகமுடையார் இனத்தினர் அனைவரும் தவறாது வாக்களித்து 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி வெறுவதற்கான வேலைகளைச் செய்து மீண்டும் ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்திட எங்களது பணிகளைச் செய்வோம் என்று உறுதி கூறுகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



