பக்தியிசை பரப்பிய பாவலர்கள் 3…கோவை கூத்தன்

பாசின்சோ சிகரெட்டும், கோல்டு ஸ்பாட் கலரும்!

சில மனிதர்களைப் போல சில இடங்கள், சில பொருட்களை எப்போதும் மறக்க முடியாது ஆழமாய் வேரூன்றிய நினைவுகள், அவ்வப்போது மனதிற்குள் மதம் பிடித்த யானையைப் போல ஆட்டம் போடும். அதைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு சுலபமில்லை. அதை அடக்குவது மகா கடினம். நான் வாழ்வது முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய மதுரை இல்லை. எல்லாம் மாறி விட்டன என்பதை விட மாற்றப்பட்டுள்ளன. நகரமயமாதலின் பின்னணியில் இடம் பெயர்ந்து போனவர்களின் பெருமூச்சு, அவர்கள் வசித்த இடங்களைக் கடக்கும் போது பெரும்பூதம் என மறைக்கிறது.

நடராஜன் தேநீர் கடை
இப்படித்தான் நான் பிறந்த கோ.புதூர் நிறையவே மாறி விட்டது. அது வளர்ச்சி என்று சொல்ல முடியாது. ஒரு காலத்தில் புதூர் மார்க்கெட் பின்புறம் பறையர் தெரு என்று ஒன்று இருந்தது. அது ராமவர்ம நகர் என பெயர் மாறியிருக்கிறது. ஆனால், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்நிலை அப்படியே தான் இருக்கிறது.
இப்படித்தான் புதூரில் வளர்ச்சி என்ற பெயரில் எழும்பி நிற்கும் கட்டிடங்கள் விழுங்கிய மனிதர்களில் நடராஜனும் ஒருவர்.

மதுரை கோ.புதூர் ஐ.டி.ஐ பஸ்ஸ்டாப்பில் தேநீர் கடை நடத்தி வந்தவர். திக்கான பாலில் அவர் போடும் தேநீருக்கு மட்டுமல்ல, அவர் கடையில் ஒலிக்கும் பாடல்களுக்கு தனி ரசிகர் கூட்டமே இருந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாட்டில் இருந்து டேப்ரிக்கார்டரை வாங்கியவர் அவர். அதில் காலையில் பக்தி பாடல்கள், குறிப்பாக முருகன் பாடல்கள் ஒலிக்கும். மாலை நேரத்திற்குப் பிறகு இசைஞானியின் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்து விடும். கடைக்குள் வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர்களில் ஒலிக்கும் பாடல்கள் வழங்கிய சுவையைப் போல சுடச்சுட மிக்சரும், பக்கோடாவும் நடராஜன் கடையில் ஸ்பெஷல் ஐயிட்டங்கள். அந்த கடையின் எதிரே அரசு ஐ.டிஐ இருந்தது. இப்போதும் இருக்கிறது. அப்போது பத்தாம் வகுப்பு தாண்டிய மாணவர்கள், சிகரெட் வாங்கி அதை கடைக்குப் பின்னால் மாட்டப்பட்ட சாக்கு பை பின்புறம் நின்று ரகசியமாய் குடித்து விட்டு இறுமுவார்கள். யாராவது வருகிறார்களா என சுற்றும் முற்றும் பார்ப்பார்கள்.

கோல்டு ஸ்பாட் கலர்
அன்றைய காலம், சுயஒழுக்கம் கற்றுத்தந்த பயம், தவறுகளைச் செய்யக்கூடாது என்று உணர்த்திக் கொண்டேயிருந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பு டவுசர் போட்ட சின்னப் பையன்கள் சிகரெட் குடித்தால், சாலையில் செல்லும் யாரிடமாவது அடிபடுவார்கள். முளைச்சு மூணு இலை விடல, அதுக்குள்ள உனக்கு சிகரெட் கேட்குதா என கன்னம் பழுக்க அடி விழும். இதற்குப் பயந்தே பலர் சிகரெட் குடிக்க பயந்தார்கள். இப்படி பயந்த பல விடலைகள், நடராஜன் தேநீர் கடையில் பாசின்சோ சிகரெட் வாங்கி சாக்கு மறைப்பிற்கு ஓடுவார்கள். பிங்க் கலரில், தொப்பி கோட்ட முதியவர் படம் போட்ட பாசின்சோ சிகரெட் அட்டையைப் பார்க்கவே அசத்தலாக இருக்கும். என்னைப் போன்ற சிறுவர்கள் சிகரெட் அட்டை விளையாடும் போது இந்த பாசின்சோ அட்டையை களத்திலேயே இறக்க மாட்டோம். நடராஜன் கடையில் பாசின்சோ விற்பனை அப்போது அதிகம். அதே போல அப்போது கோல்டு ஸ்பாட் கலர் பிரபலம். வித்தியாசமான ஆரஞ்ச் சுவை கொண்ட கோல்டு ஸ்பாட் கலரின் மூடியின் உள்ளே ஒட்டியிருக்கும் ரப்பரில் விதவிதமான படங்கள் இருக்கும். இதற்காகவே இந்த சோடா மூடியைச் சேர்க்கும் சிறுவர்கள் கூட்டம், நடராஜன் தேநீர் கடையைச் சுற்றி வரும். இப்போது பாசின்சோவும் இல்லை, கோல்டு ஸ்பாட்டும் இல்லை.

மிக்சருக்கான முரட்டு ஓமப்பொடியை எண்ணெய்யில் பிழிந்தவாறு டேப்ரிக்காடரில் ஒலிக்கும் பாடலோடு சேர்ந்து சத்தமாக நடராஜன் பாடுவார். சாமியார் போலத் தோற்றம் காட்டிய நடராஜன், குரலில் அவ்வளவு ஏற்றம் இறக்கம் இருக்கும்.

சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே….
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
சுவையான அமுதே செந்தமிழாலே
உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா…

என அவர் பாடப்பாட எண்ணெய் சட்டியில் பிழியப்பட்ட ஓமப்பொடி, அவர் பாடலைக் கேட்டு எழுந்து வரும். இந்த பாடலில் உள்ள

அரகர சிவசுத மால்மருகா என
அனுதினம் ஒருதரமாகிலும் – உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா…

என்ற வரிகளைத் தேர்ந்த பாடகர் போல நடராஜன் பாடும் அழகே அழகு. நடராஜனுக்கு மூன்று தம்பிகள். அனைவரும் தேநீர் கடையில் தான் ஆளுக்கொரு வேலை செய்வார்கள். இதில் கடைசி தம்பியான முத்துராமன், மிகச்சிறந்த கபடி வீரர். பக்திப் பழம் போல காட்சி தரும் நடராஜன் நெற்றியில் எப்போதும் திருநீற்றுப் பட்டை, நடுவில் பெரிய அளவு குங்குமப்பொட்டும் இருக்கும். அவர் குரலில் ஒலித்த சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா பாடலை, தூக்குவாளியில் தேநீர் வாங்க வரும் போது பலமுறை கேட்டிருக்கிறேன். அப்போது பார்சல் தேநீர் 25 பைசா தான். அந்த கடைக்குப் பின்புறம் தான் எனது வீடு. சூடான மிக்சரும், சுவையான தேநீரும் பருக நடராஜன் கடையில் கூட்டம் அலைமோதும். குறிப்பாக, காலையில் கூட்டம் அதிகமாக இருக்கும். காரணம் ஐ.டிஐ பையன்கள் கூட்டம். என் பெரியம்மா அடிக்கடி தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர். இதனால் தேநீர் வாங்க நான் தான் கடைக்கு போக வேண்டும். அதன் காரணமாக அந்த கடையில் ஒலிக்கும் பாடல்கள் எனக்கு மனப்பாடம்.

கவிஞர் கோவை கூத்தன்
சொல்லாத நாளில்லை என டி.எம்.சௌந்தரராஜன் மெய்யுருகி பாடிய இந்த பாடலை எழுதியவர் கோவை கூத்தன். சங்க காலப்புலவர்களில் ஒருவரான மதுரை கூத்தனாரை போல கோவையில் பிறந்த இந்த கூத்தன் எழுதிய ஒவ்வொரு பாடலும் பதிகங்களைப் போல பக்தியிசையின் உச்சம். டிஎம்எஸ்- கோவை கூத்தன் கூட்டணியில் உருவான பக்தி பாடல்கள் அப்போது மிகவும் பேமஸ். குறிப்பாக, கோயில் விழாக்கள் மட்டுமின்றி கடை திறப்புவிழாக்களிலும் அடிக்கடி ஒலிபரப்பப்படும். முருகப் பெருமானை புகழ்ந்து டி.எம்.சௌந்தரராஜன் இசையமைத்து பல பாடல்களைப் பாடியுள்ளார். அப்படி அவர் பாடி புகழ்பெற்ற பல பாடல்களை எழுதிய கோவை கூத்தன் மிகுந்த இசை ஞானம் கொண்டவர். அவர் எழுதிய சொல்லாத நாளில்லை பாடலைப் பாடி இசையமைத்தவர் டி.எம்.சௌந்தரராஜன். ஆனால், என்ன கொடுமை என்றால், ஆன்மீகம் (aanmeegam.co.in) இணையதளத்தில் ” சொல்லாத நாளில்லை பாடலில் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பக்தி பரவசம் மேலோங்கி இருக்கும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

கவிஞர் கோவை கூத்தனுடன் சேர்ந்து டி.எம்.சௌந்தரராஜன் வழங்கிய பாடல்களுக்கு வயது 67 வயதிருக்கும். ஆனால், இன்றும் புதுப்பொழிவுடன் அப்பாடல்கள் திகழ்கின்றன. முருகா ஆ ஆ.. முருகா ஆ ஆ ஆ ஆஹஹா என்று டி.எம்.சௌந்தரராஜனின் ஆலாபனையோடு துவங்கும்

அழகென்ற சொல்லுக்கு முருகா – உந்தன்
அருளன்றி உலகிலே பொருளேது முருகா…

பாடல் கோவை கூத்தனின் முத்திரைப் பாடலாகும். டி.எம்.சௌந்தரராஜன் இசையமைத்த பாடிய இந்த பாடலில், குன்றாறும் குடி கொண்ட முருகா பக்தர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ முருகா என கோவை கூத்தன் எழுதியிருப்பார். அறுபடை வீடுகள் என்பதை குன்றாறும் ஒரு வரியில் சுட்டிக்காட்டியிருப்பார். சின்ன சின்ன வார்த்தைகளைக் கொண்டு முருகனின் அழகை, பெருமையை கோவை கூத்தன் வர்ணிக்கும் அழகே அழகு. முருகா என்று அழைக்கவா என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இசைத்தட்டில் இடம் பெற்ற பாடல்கள் அத்தனையும் புகழ் பெற்றவை. ஆதாரம் நின் திருப்பாதாரம், வேலுண்டு வினை நீக்க, சொல்லும் மணக்கும் சுவையாய் இனிக்கும் ஆகிய பாடல்கள் கோவை கூத்தனின் எழுத்தாற்றலுக்கு சான்று.

பாமர மக்கள் ரசிக்கும் முருகப் பெருமானின் பாடல்களை கர்நாடக இசைவடிவத்தில் டிஎம்எஸ் தந்துள்ளார். அதற்கு பொருத்தமான வரிகளை கூத்தன் தந்துள்ளார். 1959-ம் ஆண்டு உருவான பழனிவேல் முருகையா என்ற பாடல் டி.எம்.சௌந்தரராஜன் பாடி, இசையமைத்த பிரபலமான பக்தி பாடலாகும். இந்த பாடலை கூத்தன் தான் எழுதியுள்ளார். பாடல் துவங்குவதற்கு முன் டி.எம்.சௌந்தரராஜனின் கர்நாடக சங்கீதம் அடடே போட வைக்கும். அதற்கு ஈடாக இசைக்கலைஞர்களும் போட்டி போடும் அற்புதமான இந்த பாடல் பக்தியிசையில் இப்படியொரு கர்நாடக சங்கீதம் கொண்ட பாடலா என வியக்க வைக்கும். திருப்புகழில் உள்ள எத்தனையோ கோடி கோடி என்ற வரியை வைத்து கோவை கூத்தன், எத்தனையோ கோடி கோடி உத்தமர்கள் உன்னை எண்ணி தினம் பாடி பாடி தேடிடுவார் என்று முருகனின் புகழை எழுதியது சமயோசிதம்.

திருப்பதி ஏழுமலையானை புகழ்ந்து கோவை கூத்தன் பல பாடல்களை எழுதியுள்ளார். குறிப்பாக டி.எம்.சௌந்தரராஜன் பாடிய திருப்பதி மலைவாசா, ஏழுமலையானை எண்ணி துதிப்போர்க்கு ஆகிய பாடல்களாகட்டும், சிவனைப் போற்றி அவர் எழுதிய தில்லையிலே விளங்கும் கனகசபாபதி பாடலாகட்டும் பக்தியிசையின் முக்கிய பாடல்களின் வரிசையில் உள்ளன. ஆனால், இத்தனை பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த நடராஜனின் தேநீர் கடை இப்போது அங்கு இல்லை. கோவை கூத்தனின் முகம் எப்படியிருக்கும் என்று தேடிக் கொண்டிருப்பதை போல நடராஜன் மற்றும் அவரது சகோதரர்களின் முகங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
-ப.கவிதா குமார் (நினைவுகள் சுழலும்)

1)https://maduraiseithi.in/p-kavitha-kumar-devotional-music-series-part-1/

2)https://maduraiseithi.in/poets-who-propagated-devotional-music-1-m-p-sivam/

3)https://maduraiseithi.in/lyricists-who-popularized-devotional-music-2/

இப்போதே பகிருங்கள்

One comment

  1. அருமை அருமை மிக அருமை! நான் தமிழ் பேச கற்றதற்கும் தமிழின் அழகை உணர்ந்து புரிந்து கொண்டதற்கும் காரணம் நாகூர் ஹனிபா, டி எம் எஸ், சீர்காழி, இலங்கை வானொலி, சிவாஜி கணேசன். டி எம் எஸ் முருகன் பாடல்கள், சீர்காழி பக்தி பாடல்கள், ஹனிபா பாடல்கள் ஆகியவை வழிபாடு ஆன்மீகம் ஆகியவற்றைத் தாண்டி அந்த பாடல்களை எழுதிய கவிஞர்களின் கற்பனை வளம், தமிழின் மொழி வளமை, இனிமை ஆகியவற்றை உணர்ந்து பயன்படுத்தியமை, பாடல்களின் சொற்களையும் ஒவ்வொரு எழுத்தையும் இந்த பாடகர்கள் உணர்ந்தும் அனுபவித்தும் பாடிய விதம்… என்று சொல்லிக்கொண்டே போகலாம். என்ன பொருத்தமோ! மேட்டூரில் இருக்கிறேன். மின்துறை ஊழியர் குடியிருப்புக்களை தாண்டி ஒரு முருகன் கோவிலில் இருந்து
    இரண்டு நாள் முன்பு பங்குனி உத்திர நாள் அன்று மாலை டி எம் எசின் அத்தனை முருகன் பாடல்களும் வரிசையாக ஒலிக்க, மாடியில் இருட்டான இடத்தில் உட்கார்ந்து முழுசாக கேட்டு அனுபவித்தேன்! பக்தி பாடல்கள் என்ற பெயரில் கற்பனை வளமும் இன்றி சொல் வளமும் இன்றி தமிழின் இனிமை துளி அளவும் இன்றி எழுதப்படுகின்ற வரிகளுக்கு காட்டு கூச்சலும் இரைச்சலும் ஆக போடப்படும் இசை இப்போதெல்லாம், முடியவில்லை.
    முகநூல் பதிவு ஒன்றில் நான் குறிப்பிட்டதை சொல்கிறேன். அவரது இரண்டு பாடல்கள் மிக குறிப்பானவை. ஒன்று அன்று கேட்பவன் அரசன் மறந்தால்… இது ஒரு மனிதன் தன்னை தானே சுய பரிசோதனை செய்து தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொள்ளும் நிலையில் அமைந்த பாடல். பக்தி என்ற எல்லைகோட்டை தாண்டிய பாடல். மற்றது இசையால் வசம் ஆகா இதயம் எது? இது தமிழின் அழகு, தமிழ் இசையின் அழகு, இசை இலக்கணம் ஆகியவற்றை அழகுற சொல்லும் பாடல். இந்தப் பாடலில் இறைவனே என்ற ஒரு சொல்லை எடுத்து விட்டால் தமிழிசையின் இலக்கணத்தை சொல்கின்ற ஒரு பாடமாகவே இருக்கும்! இன்னும் நிறைய சொல்லலாம். சொற்களையும் சொற்களின் அழகையும் அமுக்கி விடாமல் அவற்றை இசைக்கருவிகளின் ஆதிக்கத்தால் கொன்று விடாமல் தட்டில் வைத்து நமக்குத் தந்த அந்த பழைய பக்தி பாடல்களை மட்டுமே மனம் என்றும்
    நாடுகின்றது. வாழ்த்துகள். எழுதுங்கள். இக்பால்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *